திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர விபத்து: மணமக்கள் உள்பட 120 பேர் பலி!
ஈராக்கில் திருமணம் நடைபெற்ற அரங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மணமக்கள் உட்பட 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட சோகம்
ஈராக்கில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் நினேவா மாகாணத்தின் ஹம்தானியா பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் செப்டம்பர் 27ம் திகதியான இன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
ஆனால் இந்த திருமண நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது, மேலும் இதனால் அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
அரங்கத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியதால் கூடியிருந்த மக்கள் வெளியேற வழியில்லாமல் அரங்கத்திற்குள்ளே சிக்கிக் கொண்டனர்.
100 பேர் வரை உயிரிழப்பு
இந்த தீ விபத்தில் துரதிஷ்டவசமாக மணமக்கள் உள்பட 120 பேர் வரை உடல் கருகி பலியாகியுள்ளனர், அத்துடன் 200க்கும் மேற்பட்டோர் தீவிரமான தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஈராக் நாட்டில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்தை தொடர்ந்து விசாரணையை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அந்த நாட்டின் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |