ஏணியில் இறங்கிக்கொண்டே குழந்தைக்கு CPR செய்து உயிர்கொடுத்த தீயணைப்பு வீரர்! தீயாக பரவும் வீடியோ
தீவிபத்தில் சிக்கி மூச்சின்றி கிடந்த குழந்தையை ஏணியில் இறங்கிக்கொண்டே CPR செய்து உயிர்கொடுத்த தீயணைப்பு வீரரின் வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
எரியும் கட்டிடத்தில் சிக்கித் தவிக்கும் உயிர்களை மீட்பது எவ்வளவு கடினம் என்பது தீயணைப்பு வீரர்களுக்கு தான் தெரியும்.
தங்கள் உயிரை பணயம் வைத்து சுட்டெரிக்கும் தீப்பிழம்புகளுக்குள், நச்சு புகைக்குள் புகுந்து பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என எந்த உயிரையும் காப்பாற்றும் தீயணைப்பு விரைகள் ஹீரோக்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு ஹீரோவின் நம்பமுடியாத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஓஹியோவில் ஒரு வீட்டுக்குள் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் சற்று நேரத்தில் அவ்விடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்துவிட்டனர்.
இந்த பரபரப்பான வீடியோ காட்சியில், ஒரு தீயணைப்பு வீரர் முதல் மாடியில் இருக்கும் அறைக்குள் ஏணி போட்டு ஜன்னல் வழியாக உள்ளே செல்கிறார்.
சில நொடிகளில் அவர் சில மாதங்களே ஆன ஒரு கைக்குழந்தையை தூக்கி வருகிறார்.
அந்த நேரத்தில் ஆக்சிஜனை நன்றாக சுவாசித்துக்கொண்டு காத்திருந்த மற்றோரு வீரர், விறுவிறுவென ஏணியில் ஏறி, குழந்தையை கையில் வாங்கி, ஏணிப்படியில் இறங்கிக்கொண்டே, குழந்தைக்கு CPR கொடுக்கிறார்.
புகை சுவாசித்ததால் அதுவரை அசைவின்றி இருந்த குழந்தை, தீயணைப்பு வீரரிடமிருந்து உயிர்முச்சை பெற்று உயிர்த்தெழுந்தது.
உயிரைப் பணயம் வைத்து அறைக்குள் இருந்து குழந்தையை தூக்கிவந்தவர் Bob Swick, சரியான சமயத்தில் ஏணியிலிருந்து பின்னோக்கி இறங்கிக்கொண்டே மூச்சு கொடுத்தவர் Scott Lewis. இந்த சம்பவம் 2002 மார்ச் 9-ஆம் திகதி நடந்தது.
இருப்பினும் சரியாக 19 வருடங்கள் கழித்து இந்த ஹீரோக்களின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.