பொதுமக்களிடம் உதவி கோரிய இலங்கை பொலிஸார்: வன்முறையை கட்டுப்படுத்த அதிரடி உத்தரவு!
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தலாம் என அந்த நாட்டின் தலைமை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் தீவிரமான போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இருப்பினும் இலங்கையில் வன்முறை நடவடிக்கையானது குறையாமல், ஆங்காங்கே வாகனங்களை கொளுத்துதல், பிரதமர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளை கொளுத்துதல் ஆகிய சில வன்முறை சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் பதற்றம் அதிகமாக உள்ள இடங்களில் வன்முறையை கட்டுபடுத்த இலங்கையில் ராணுவம் களமிறக்கப்பட்டு இருக்கும் நிலையில், பொது ஊரடங்கும் கூடுதாலாக இரண்டு நாள்களுக்கு நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து தற்போது, இலங்கையின் தலைமை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தலாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வன்முறைக்காரர்களை கண்டறிய இலங்கை பொதுமக்களின் ஆதரவு வேண்டும் என்ற கோரிக்கையும் இலங்கை காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணுவத்தால் தலையில் சுட்டுக்கொல்லபட்ட பத்திரிக்கையாளர்: சர்வதேச சமுகத்திடம் அல் ஜசீரா நிறுவனம் கோரிக்கை
மேலும் இதுதொடர்பான தகவல்களை மக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க பல்வேறு தொலைப்பேசி எண்களையும், இணையதள முகவரிகளையும் இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.