தேர்தலில் பெரும்பான்மை இழந்த பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானுக்கு கிடைத்துள்ள முதல் தோல்வி...
தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை இழந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அதன் பலனை அனுபவிக்கத் துவங்கிவிட்டார்.
ஆம், நாடாளுமன்றத்தில் அவருக்கு முதல் தோல்வி கிடைத்துள்ளது.
எப்போது அவரது கட்சி பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முன்வந்ததோ, அப்போதே அரசியல் வல்லுநர்கள் இப்படி ஒரு விடயம் நடக்கும், மேக்ரான் நிறைய விடயங்களை விட்டுக்கொடுத்துப் போகவேண்டியிருக்கும். எந்த முடிவையும் உறுதியாக எடுக்க முடியாது, எந்த மசோதாவையும் தைரியமாக நிறைவேற்ற முடியாது என கணித்தார்கள். அதேபோல நடந்தும்விட்டது.
பிரான்சுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பிரான்சுக்குள் நுழையும்போது, கொரோனா தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தை அல்லது தங்களுக்குக் கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும் என வலியுறுத்தும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்கவேண்டும் என்று கோரும் மசோதா ஒன்று நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தின் முன் வைக்கப்பட்டது.
ஆனால், 219 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மசோதாவை எதிர்த்தும், 195 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்ததைத் தொடர்ந்து அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதாவது, பெரும்பான்மை இல்லாததால், ஆளுங்கட்சி கொண்டு வந்த மசோதா தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
தொடர்ச்சியாக இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என பாராட்டப்பட்ட மேக்ரானுக்கு கிடைத்த முதல் தோல்வியாக இது கருதப்படும் நிலையில், இன்னமும் இதேபோல் பல தர்மசங்கடங்களை அவர் எதிர்கொள்ளவேண்டிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.