புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்தை துவக்கியது அமெரிக்கா... நாளொன்றிற்கு 50 பேரை வெளியேற்ற திட்டம்
அமெரிக்கா, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டத்தை துவக்கியுள்ளது.
அமெரிக்காவின், 'Remain in Mexico' என்ற கொள்கையின்கீழ், அமெரிக்க அதிகாரிகள் முதன்முறையாக இரண்டு புலம்பெயர்ந்தோரை புதன்கிழமை மெக்சிகோவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அதன்படி, புதன்கிழமை, நிகராகுவா நாட்டவரான Enrique Manzanares மற்றும் கொலம்பியாவைச் சேர்ந்த ஒருவர் ஆகிய இரண்டு பேர், அமெரிக்காவின் டெக்சாசிலுள்ள El Paso என்ற இடத்தில் எல்லையைக் கடந்து மெக்சிகோவிலுள்ள Ciudad Juárez என்ற இடத்தில் அவர்களுக்காக காத்திருந்த மெக்சிகோ அதிகாரிகளிடம் நடந்தே சென்று சேர்ந்தார்கள்.
அவர்களை அழைத்துச் சென்ற அமெரிக்க எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், அவர்களை மெக்சிகோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள்.
அடுத்தபடியாக, வியாழக்கிழமை, மேலும் ஆறு புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்தல் அதிகாரிகளால் மெக்சிகோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இதுபோக, நாளொன்றிற்கு 50 புலம்பெயர்ந்தோர் வரை அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக பெயர் வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கையின் பேரில், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோரை மெக்சிகோவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிமுகம் செய்தார். ஆனால், ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றதும், முதல் வேலையாக, தான் அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளே, ட்ரம்பின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்திட்டார்.
'Remain in Mexico' என்னும் இந்த திட்டம் என்னவென்றால், புகலிடக் கோரிக்கையாளர்களின் விசாரணை அமெரிக்க புலம்பெயர்தலில் எப்போது நடைபெறுகிறதோ, அதுவரை அவர்கள் மெக்சிகோவில் காத்திருக்கவேண்டும் என்பதாகும்.
முதலில் இந்த திட்டத்தை ரத்து செய்த ஜோ பைடன், பிறகு, டெக்சாஸ் மற்றும் மிசௌரி மாகாணங்கள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து வேறு வழியில்லாமல் மீண்டும் அந்த திட்டத்தை அறிமுகம் செய்யும் நிலைக்கு ஆளானதைத் தொடர்ந்து, தற்போது புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.