அவுஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறை.. 4 லட்சம் பார்வையாளர்கள் திரண்ட போட்டி!
அவுஸ்திரேலிய வரலாற்றில் கார் பந்தயம் ஒன்றை காண முதல் முறையாக 4 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் திரண்டனர்.
மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பெல்ஜியத்தை சேர்ந்த மேக்ஸ் வெர்ஸ்டப், மொனாகோவின் சார்லஸ் லீகிளார்க், பிரித்தானியாவின் ஜார்ஜ் ரசல், மெக்ஸிகோவின் செர்ஜியோ பெரஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியின் 39வது சுற்றில் மேக்ஸ் வெர்ஸ்டப்-யின் கார் புகை வந்தபடி நின்றதால், நடப்பு சாம்பியனான அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இறுதியில் ஆரம்பம் முதலே முதலாவதாக வந்த மொனாகோ வீரர் சார்லஸ் லீகிளார்க் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.
அவரை விட 20 வினாடிகள் தாமதமாக வந்த மெக்சிகோ வீரர் செர்ஜியோ பெரஸ் 2வது இடத்தை பிடித்தார். ஜார்ஜ் ரசல் 3வது இடத்தை பிடித்தார். இந்தப் போட்டியில் சுவாரசிய நிகழ்வு ஒன்று நடந்தது. இந்தப் போட்டியை காண 4 லட்சத்து 20 ஆயிரம் பார்வையாளர்கள் திரண்டனர்.
அவுஸ்திரேலியாவில் வார இறுதி நாட்களில் விளையாட்டு போட்டி ஒன்றிற்கு இவ்வளவு பார்வையாளர்கள் திரண்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால், இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக பார்க்கப்படுகிறது.