தமிழக ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர்.. யார் இந்த சிந்து?
தமிழக ரயில்வேயில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் டிக்கெட் பரிசோதகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய காலங்களில் பல துறைகளில் திருநங்கைகள் முன்னேறி வருகின்றனர். அவர்களுக்கான நல்ல பாதையை தேர்ந்தெடுத்து வளர்ச்சி அடைவதை நாம் பார்த்து வருகிறோம். அப்படி ஒருவர் தான் திருநங்கை சிந்து.
தமிழக மாவட்டம், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். இதனால், தெற்கு ரயில்வேயில் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அவர் கூறியது..
இதுகுறித்து திருநங்கை சிந்து கூறுகையில், "என்னுடைய சொந்த ஊர் நாகர்கோவில். கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தில் ரயில்வே பணியில் சேர்ந்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்தேன்.
அங்கு நான் ரயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன். அப்போது, எனக்கு சிறிய விபத்தில் காயம் ஏற்பட்டதால் வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன். பின்னர், டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து, பதவி ஏற்றுள்ளேன்.
இந்த நிகழ்வு என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது. திருநங்கைகள் மனம் தளராமல் கல்வி, உழைப்பு மூலம் எந்த உயரத்தையும் எட்ட முடியும். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |