சுவிஸ் கோர சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட முதல் நபர்
சுவிஸ் மதுபான விடுதி தீ விபத்தில் சிக்கி பலியானவர்களில் இத்தாலிய இளைஞரான கோல்ஃப் வீரர் முதலாவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய தேசிய அணி
சுவிஸ் தீ விபத்தில் சிக்கி பலியான 47 பேர்களில் 17 வயதான Emanuele Galeppini என்பவரும் ஒருவர். துபாய் மாகாணத்தில் வசித்துவரும் இவர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சுவிஸ் சென்றுள்ளதாகவே கூறப்படுகிறது.

இத்தாலிய கோல்ஃப் கூட்டமைப்பு கலெப்பினியின் மரணத்தை அறிவித்துள்ளது. அதில், ஆர்வம் மற்றும் உண்மையான விழுமியங்களை உள்ளடக்கிய ஒரு இளம் விளையாட்டு வீரரின் மறைவுக்காக துக்கம் அனுசரிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
17 வயதுடைய அந்த வீரர், உலக அமெச்சூர் கோல்ஃப் தரவரிசை இணையதளத்தில் ஒரு இத்தாலிய இளநிலை கோல்ஃப் வீரராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
துபாயில் வசித்து வந்த அவர் இத்தாலிய தேசிய அணியின் ஒரு பகுதியாக விளையாடியுள்ளார். 2025 ஆம் ஆண்டில் மட்டும் அவர் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போட்டியிட்டிருந்தார்.
வாலைஸ் மாகாணத்தில் அமைந்துள்ள Le Constellation மதுபான விடுதியில் சுமார் 200 பேர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பேரிடர் திட்டம்
இறந்தவர்களை அடையாளம் காண நிபுணர்கள் பல் மற்றும் டிஎன்ஏ பதிவுகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தீக்காயங்களின் தீவிரத்தன்மையால் அடையாளம் காணும் பணிகள் தாமதமாகி வருகிறது.

காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள், சுவிட்சர்லாந்து முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளுக்கும், அண்டை நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வாலைஸ் மருத்துவமனை தனது பேரிடர் திட்டத்தைச் செயல்படுத்தி, காயமடைந்த 60 பேரை அனுமதித்தது; அவர்களில் பலருக்கு மூன்றாம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் சில குடிமக்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |