24 ஆண்டுகளில் முதல்முறையாக... வடகொரியாவில் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
கடந்த 24 ஆண்டுகளில் முதன்முறையாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வடகொரியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
விளாடிமிர் புடினுடன் பாதுகாப்பு அமைச்சர்
உள்ளூர் நேரப்படி விடிகாலை 3 மணிக்கு விளாடிமிர் புடின் வடகொரியாவில் தரையிறங்கியுள்ளார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலேயே நேரிடையாக சென்று விளாடிமிர் புடினை வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் வரவேற்றுள்ளார்.
கை குலுக்கி, ஆரத்தழுவி அன்பை பரிமாறிகொண்ட இரு தலைவர்களும், பின்னர் கிம் தமது காரிலேயே ரஷ்ய ஜனாதிபதியை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜோங் உன் சந்திப்பானது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று வடகொரிய உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வடகொரிய சுற்றுப்பயணத்தில் விளாடிமிர் புடினுடன் பாதுகாப்பு அமைச்சர் Andrei Belousov, வெளிவிவகார அமைச்சர் Sergei Lavrov மற்றும் ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர்கள் பலர் உடன் சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் இருந்து விருந்தினர் மாளிகைக்கு செல்லும் சாலையின் இரு புறமும் ரஷ்ய கொடிகளும் புடினின் புகைப்படங்களும் காணப்பட்டுள்ளது. இரு தலைவர்களும் ஒரு சுருக்கமான சந்திப்பை நடத்தியதுடன், புதன்கிழமை மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இது இரண்டாவது முறையாகும்
அப்போது இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று கூறப்படுகிறது. விளாடிமிர் புடின் வடகொரியாவிற்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறையாகும். அவர் கடைசியாக 2000 ஆண்டு வடகொரியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது வடகொரியாவின் தலைவராக கிம்மின் தந்தை இருந்தார். புதன்கிழமை தான் அரசு முறை வரவேற்பு மற்றும் விழா முன்னெடுக்கப்படுகிறது. கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் புடின் அதன் பின்னர் வட கொரியாவில் உள்ள ஒரே ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தைப் பார்வையிட செல்கிறார்.
வடகொரியாவில் இருந்து விளாடிமிர் புடின் வியட்நாமில் மற்றொரு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பயன்படுத்துவதற்காக வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்க புடின் திட்டமிட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.
மேலும், பொருளாதார நிலையில் தத்தளிக்கும் வடகொரியாவுக்கு தற்போது பணம் வேண்டும் என்பதால் இரு தலைவர்களின் இந்த சந்திப்பானது சர்வதேச கவனம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |