முதல்முறையாக HIV நோயிலிருந்து குணமடைந்த பெண்
உலகிலேயே முதல்முறையாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குணமடைந்துள்ளார்.
அமெரிக்காவில் லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் வைரசுக்கு எதிராக இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி கொண்ட ஒருவரிடமிருந்து எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையைப் பெற்றதன் முலம், உலகிலேயே எச்.ஐ.வி நோயிலிருந்து குணப்படுத்தப்பட்ட முதல் பெண்ணாக மாறியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக இரண்டு ஆண்கள் இதேபோன்று எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளதால் இப்பெண் மூன்றாவது நபர் என்றும் அறியப்படுகிறார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வரில் நடந்த ரெட்ரோவைரஸ்கள் மற்றும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுகள் பற்றிய மாநாட்டில், எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்த 64 வயதான கலப்பு இனப் பெண்ணின் வழக்கு குறித்து பேசப்பட்டது.
எலும்பு மஜ்ஜையில் இரத்தத்தை உருவாக்கும் உயிரணுக்களில் தொடங்கும் புற்றுநோயான மைலோயிட் லுகேமியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கு தண்டு இரத்தத்தைப் பெற்றதில் இருந்து, பெண் 14 மாதங்களாக எச்.ஐ.வி வைரஸிலிருந்து விடுபட்டு, ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை எனும் ஆற்றல் வாய்ந்த சிகிச்சைகள் தேவையில்லாமல் இருந்துள்ளார்.
ஏற்கெனவே, இதே சிகிச்சையை பெற்ற ஒரு வெள்ளை மற்றும் ஒரு லத்தீன் இன ஆண்கள் குணமடைந்துள்ளனர். கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின் (UCLA) டாக்டர். யுவோன் பிரைசன் மற்றும் பால்டிமோர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் டெபோரா பெர்சாட் ஆகியோரால் நடத்தப்பட்ட ஒரு பெரிய அமெரிக்க ஆதரவு ஆய்வின் ஒரு பகுதியாக இந்த கலப்பின பெண்ணின் வழக்கு உள்ளது.
இந்த ஆராய்ச்சியின் அடுத்தக்கட்டமாக புற்றுநோய் மற்றும் பிற தீவிர நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தொப்புள் கொடியின் இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படும் எச்ஐவி உள்ள 25 நோயாளிகளை ஆய்வு செய்யப்படவுள்ளது.
சோதனையில் உள்ள நோயாளிகள் முதலில் புற்றுநோய் நோயெதிர்ப்பு செல்களைக் கொல்ல கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மருத்துவர்கள் பின்னர் ஒரு குறிப்பிட்ட மரபணு மாற்றம் உள்ள நபர்களிடமிருந்து ஸ்டெம் செல்களை இடமாற்றம் செய்கிறார்கள், அதில் செல்களைப் பாதிக்க வைரஸால் பயன்படுத்தப்படும் ஏற்பிகள் இல்லை.
இந்த நபர்கள் எச்.ஐ.வி-யை எதிர்க்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறார்கள் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
எச்.ஐ.வி-யுடன் வாழும் பெரும்பாலான மக்களை குணப்படுத்த எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஒரு சாத்தியமான உத்தி அல்ல, ஆனால், எச்.ஐ.விக்கு சிகிச்சை சாத்தியம் என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது என்றும் எச்.ஐ.வி சிகிச்சைக்கான சாத்தியமான உத்தியாக மரபணு சிகிச்சையைப் பயன்படுத்துவதை மேலும் வலுப்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.