மேலும் ஒரு தளபதியை இழந்த ரஷ்யா: இந்தமுறை கடற்படை
உக்ரைன் துருப்புகளால் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் துணைத் தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் விளாடிமிர் புடினின் படைகளுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனுடனான போரில் இதுவரை கொல்லப்பட்ட முதல் மூத்த ரஷ்ய கடற்படை அதிகாரி இவர் என கூறப்படுகிறது. 51 வயதான Andrey Paliy துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகளுடன் தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே உக்ரைன் துருப்புகள் இலக்கு வைத்து அவரை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவரது மரணத்தின் சரியான சூழ்நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
கடற்படை துணை தளபதியை இழந்த சம்பவம் ரஷ்ய அதிகாரிகளால் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய கடற்படைத் துணை தளபதி Andrey Paliy கொல்லப்பட்டுள்ளார் என்பதை உக்ரைன் உறுதி செய்துள்ளது.
உக்ரேனிய தலைநகர் கீவில் பிறந்த Andrey Paliy 1993ல் உக்ரேனிய இராணுவ உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார், அதற்கு பதிலாக ரஷ்ய வடக்கு கடற்படையில் பணியாற்ற விரும்பினார்.
ரஷ்ய போர் தொடங்கிய இந்த 25 நாட்களில் இதுவரை விளாடிமிர் புடின் அனுப்பியுள்ள 5 தளபதிகளை போரில் கொன்றுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இது கண்டிப்பாக விளாடிமிர் புடினின் இராணுவத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.