விமானத்தின் என்ஜினில் சிக்கிய பறவைகள்: நடுவானில் தீப்பற்றியதால் பீதியடைந்த பயணிகள்
Flight Emergency Landing in Cardiff after Birds Strikes: பறவை கூட்டத்தின் மீது விமானம் மோதி இன்ஜினில் தீ பற்றியதை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பறவை கூட்டத்தில் சிக்கிய விமானம்
TUI விமானம் ஒன்று சைப்ரஸ் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டு இருந்த நிலையில், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவை கூட்டத்தில் மோதி இன்ஜினில் தீ பற்றியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
செப்டம்பர் 9ம் திகதி மதியம் கார்டிஃப்பில்(Cardiff) இருந்து பாஃபோஸ்(Paphos) நோக்கி செல்ல திட்டமிட்டிருந்த TOM5TN என்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பறவைகள் மீது மோதியது.

இதனால் விமானத்தின் வலது பக்க இன்ஜினில் தீப்பிடித்தது. விமானத்தில் இருந்து ஆரஞ்சு நிற தீப்பிழம்பு வெளியேறியதை விமானத்தில் இருந்த பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் விமானம் முழுவதும் தீப்பற்றிய வாடை மற்றும் புகை சூழ்ந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகினர்.
அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மீண்டும் கார்டிஃப் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக எந்தவொரு உயிர் சேதமும் இல்லாமல் விமானம் தரையிறக்கப்பட்டதாக கார்டிப் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் விமான நிலைய தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு விமானத்தில் பற்றிய தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்த நாள் மாற்று விமானத்தில் பாஃபோஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |