ட்ரோன் அத்துமீறல்... முக்கிய ஐரோப்பிய விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து
ட்ரோன் ஒன்று அத்துமீறியதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் ஒரு முக்கிய விமான நிலையம் முடக்கப்பட்டு, அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன.
காவல்துறையினர் முற்றுகை
ஜேர்மனியின் மியூனிக் விமான நிலையம், அவசர எச்சரிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியை காவல்துறையினர் முற்றுகையிட்டதால், இன்று காலை மூடப்பட்டது.

ஃபெடரல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் பேயர் தெரிவிக்கையில், பகல் சுமார் 9 மணியளவில், விமானிகள் ஒரு சந்தேகத்திற்குரிய விடயத்தைக் கவனித்தனர்.
இதனையடுத்து ஜேர்மானிய வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்பு அதிகாரிகள் பின்னர் ஓடுபாதைகளை மூடத் தீர்மானித்தனர். இந்த மூடல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்ல முடியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரிக்க ஹெலிகொப்டர் ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆதாரங்கள் ஏதேனும் உள்ளனவா எனச் சோதிப்பதற்காகக் காவல்துறையினர் தற்போது அப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனால், பகல் 10 மணியளவில் தங்கள் தேடுதலில் சந்தேகத்திற்குரிய எதையும் கண்டறியவில்லை என்று ஃபெடரல் காவல்துறை தெரிவித்தது. முன்னதாக, லித்துவேனியாவின் வான்வெளியில் ட்ரோன் ஒன்று அத்துமீற முயன்றதைத் தொடர்ந்து, மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இன்னும் உறுதிப்படுத்தவில்லை
அண்டை நாடான பெலாரஸின் எல்லைக்கு மிக அருகில் அந்த ட்ரோன் பறந்ததைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
வான்வழி ஆயுதத்தை இயக்கியதற்கு எந்த நாடு பொறுப்பு என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் ட்ரோன் ஊடுருவல்கள் குறித்த செய்திகளைத் தொடர்ந்து கூட்டணிப் போர் விமானங்கள் விரைந்து அனுப்பப்பட்டதாகக் கூறினர்.

மேலும், இக்னாலினா, உட்டேனா, ஸ்வென்சியோனிஸ் மற்றும் சரசாய் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வான்வழி தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2022-ல் உக்ரைனில் போர் தொடங்கியதிலிருந்து, லிதுவேனியா அவ்வப்போது வான்வழி அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |