ஃபுளோரிடாவில் 12 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத் தலைநகர் மயாமியில், 12 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடிந்து விழுந்த அந்தக் கட்டடத்தின் சிதைவுகளில் இருந்து இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. மூன்று நாட்களாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.
மியாமி-டேட் கவுண்டியின் மேயர் டேனியல் லெவின் காவா மியாமி கடற்கரைக்கு அருகிலுள்ள Surfside-ல் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று "இடிபாடுகளில் நான்கு கூடுதல் உடல்களையும் கூடுதல் மனித எச்சங்களையும் மீட்டெடுக்க முடிந்தது" என கூறினார்.
இதன் மூலம், இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.
கட்டட இடிபாடுகளில் 150-க்கும் அதிகமானோர் இருக்கக்கூடும் என்றும் அதனால் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இதற்கிடையில், மீட்புப் பணிகள் வேகமாக இடம்பெறவில்லை என்று கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் குறைகூறிவருகின்றனர்.
ஆனால் இடிபாடுகளில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்பதில் அதிகக் கவனம் செலுத்திவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.