ட்ரம்பின் ஒற்றை முடிவால் 3.5 மில்லியன் மக்கள் ஒரு மாதம் சாப்பிட வேண்டிய உணவுகள் வீண்
அமெரிக்காவின் உதவிகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, ஒரு மாத காலம் 3.5 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக்கூடிய உணவு, உலகம் முழுவதும் உள்ள கிடங்குகளில் வீணானதாக கூறப்படுகிறது.
காலாவதியாகிவிடும்
காஸா மற்றும் சூடான் போன்ற பசியால் வாடும் பகுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய சுமார் 60,000 மெட்ரிக் டன் பொருட்கள் ஹூஸ்டன், ஜிபூட்டி, டர்பன் மற்றும் துபாயில் உள்ள கிடங்குகளில் தேங்கியுள்ளது.
ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கு (USAID) நிதியைக் குறைத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சில இருப்புக்கள் ஜூலை மாதத்திற்குள் காலாவதியாகிவிடும், மேலும் அவை அழிக்கப்படலாம் அல்லது கால்நடை தீவனமாகப் பயன்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
USAID அமைப்பால் நடத்தப்படும் கிடங்குகளில் அமெரிக்க விவசாயிகள் மற்றும் தயாரிப்பாளர்களால் உணவு பண்டங்கள் வழங்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முன்னெடுத்த மதிப்பாய்வுகளின் அடிப்படையில், கிடங்குகளில் தேங்கியுள்ள இந்தப் பொருட்களின் மதிப்பு 98 மில்லியன் டொலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்றே தெரிய வந்துள்ளது.
காஸா மற்றும் சூடானில்
உலக உணவுத் திட்டத் தரவுகளின்படி, அந்த உணவு மூன்று மாதங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் பசி போக்கலாம் அல்லது காஸாவின் முழு மக்களுக்கும் ஆறு வாரங்களுக்கு உணவளிக்க முடியும். உலகம் முழுவதும் சுமார் 343 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
அவர்களில், 1.9 மில்லியன் மக்கள் பேரழிவு தரும் பசியை அனுபவித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் காஸா மற்றும் சூடானில் உள்ளனர், ஆனால் தெற்கு சூடான், ஹெய்தி மற்றும் மாலி பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்கம் சில மனிதாபிமான திட்டங்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது, ஆனால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், சப்ளையர்கள், கப்பல் ஏற்றுமதி செய்பவர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் செலுத்தத் தேவையான நிதி முடக்கப்பட்டதாலும் உணவு பண்டங்கள் கிடங்குகளில் தேங்கி நிற்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |