ஆழ்துளை கிணற்றில் சிக்கி பலியான சிறுவன்... பிரபலம் ஒருவர் அளித்த வாக்குறுதி
மொராக்கோவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளிக்கும் வகையில் பிரபல கால்பந்து நட்சத்திரம் ஒருவர் புதிய வீடு ஒன்றை வாங்கித்தர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
மொராக்கோவில் கடந்த செவ்வாய்க்கிழமை குடியிருப்பின் அருகாமையில் அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து 5 நாட்கள் சிக்கித்தவித்துள்ளான் 5 வயதேயான சிறுவன் ரேயன் ஓரம்.
நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் மீட்புக்குழுவினர் இரவு பகல் பாராமல் போராடியும், சிறுவனை உயிருடன் மீட்க முடியாமல் போனது. குறித்த சம்பவம் மொத்த மொராக்கோ மக்களை மட்டுமின்றி உலக அளவில் பெரும்பாலான மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ள நிலையில்,
தற்போது மொராக்கோவின் சர்வதேச கால்பந்து வீரர் அப்தெரசாக் ஹம்தல்லா, மனம் உடைந்து போயுள்ள குடும்பத்திற்கு அவர்களின் விரக்தியைப் போக்க ஒரு புதிய வீட்டை வாங்கி பரிசளிக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்.
சிறுவன் ரேயனை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தினரின் வாழ்க்கையில் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்த தம்மால் இயன்ற உதவி இதுவென அப்தெரசாக் ஹம்தல்லா குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு கால்பந்து அணிக்காக விளையாடி வந்துள்ள அப்தெரசாக் ஹம்தல்லா, தற்போது சீனாவில் ஒரு கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த சிறிய உதவி தமது பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும், மொராக்கோ மக்களின் நினைவாகவும், ரேயன் குடும்பத்திற்கு சமர்ப்பிக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமது மகனை மீட்க போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரேயனின் தாயார், கடவுளின் சித்தம் இதுவெனில், நம்மால் அதை மறுக்க முடியுமா என்றார். இந்த மீட்பு போராட்டத்தில் இரவு பகல் பாராமல் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.