காபூலில் மோசமாக தாக்கப்பட்ட முன்னாள் பிரித்தானிய தூதரக ஓட்டுனர்! பயத்துடன் வெளியிட்ட தகவல்
காபூலில் முன்னாள் பிரித்தானிய தூதரக ஓட்டுநராக பணியாற்றிய ஆப்கானியர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில், தலைநகர் காபூலில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் 11 வருடங்கள் பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கான ஓட்டுநராக பணிபுரிந்த ஊழியர் அடையாளம் தெரியாத 5 ஆயுததாரிகளால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த பிரித்தானிய தூதரக ஓட்டுநர், மே மாதம் பிரித்தானியாவுக்கு வெளியேற விண்ணப்பித்த சுமார் 150 ஊழியர்களில் ஒருவர் ஆவார். அவர், கடந்த வியாழக்கிழமை காபூலின் புறநகரில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது முகமூடி அணிந்த ஐந்து பேர் அவரது வீட்டிற்கு வந்து அவரை தாக்கினர்.
தாக்குதல் நடத்தியவர்கள் அவரிடம், இன்னும் சர்வதேச அமைப்பில் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்ததாக கூறினர்.
"நான் இல்லை என்று அவர்களிடம் சொன்னேன். அவர்கள் சொன்னார்கள்: நீங்கள் இன்னும் அந்த மக்களுக்காக வேலை செய்கிறீர்கள் என்று தெரிந்தால், நாங்கள் திரும்பி வந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவோம்” என்று எச்சரித்து சென்றதாக அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு மொழிபெயர்ப்பாளர் மூலமாக கூறினார்.
தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்ட அந்த 44 வயது ஓட்டுநர், அவரது குழந்தைகள், மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் இந்த தாக்குதலை பார்த்ததாகவும், இப்போது வீடுகளை விட்டு வெளியேற மிகவும் பயமாக உள்ளதாகவும் கூறினார்.