தொடர்ச்சியாக முன்னாள் மனைவியை துன்புறுத்திய கிரிக்கெட் வீரர்.. தண்டனையிலிருந்து விடுவிப்பு!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிய முன்னாள் வீரரான மைக்கேல் ஸ்லேடர், தனது முன்னாள் மனைவியை தாக்கிய வழக்கில் நீதி மன்றத்தின் தீர்ப்பால் சிறை செல்வதில் இருந்து தப்பியுள்ளார்.
52 வயதாகும் மைக்கேல் ஸ்லேடர், அவுஸ்திரேலிய அணிக்காக 74 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். ஓய்வுக்கு பின்னர் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த மைக்கேல், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை விமர்சித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அவர், கடந்த 2021ஆம் ஆண்டு தனது முன்னாள் மனைவியை துன்புறுத்தியது மற்றும் மிரட்டியது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக பொலிஸாரால் அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது குடும்ப வன்முறை வழக்கு பதியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் முன்னாள் மனைவிக்கு குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொல்லை கொடுத்து, தடை உத்தரவை மீறியதாக மைக்கேல் ஸ்லேடர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
அவருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும், மூன்று வாரங்கள் மனநல மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என மைக்கேல் ஸ்லேடருக்கு Waverley நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் சிறை செல்வதில் இருந்து மைக்கேல் ஸ்லேடர் தப்பியுள்ளார்.