முன்னாள் ஜப்பான் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: வெளிவரும் அதிர்ச்சி சம்பவம்
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் சுடப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபே ஷின்சோ சரிந்து விழுந்தார் என்ற தகவல் வெளியானது.
ஆனால் அவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
மட்டுமின்றி, அபே ஷின்சோ மேடையில் சரிந்து விழுந்த அதே நொடி துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், அபே ரத்த காயங்களும் காணப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி பகல் 11.30 மணியளவில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷின்சோ அபே உரையாற்றிய நிகழ்வில் இரண்டுமுறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக சம்பவப்பகுதியில் இருந்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அபே தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் இதுவரை அவர் மயக்க நிலையில் இருந்து மீளவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி 2020ல் பதவி விலகுவதற்கு முன்பு அபே இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தார்.
அதன் பின்னரும் அரசியல் வட்டாரத்தில் பலம்பொருந்திய தலைவராகவே அபே வலம் வந்தார். ஷின்சோ அபேவின் ஆதரவாளரான பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஞாயிற்றுக்கிழமை மேல்சபைத் தேர்தலை எதிர்கொள்கிறார், இதில் அவர் அபேயின் நிழலில் இருந்து வெளியேறி தமது பிரதமர் பதவியை தக்கவைப்பார் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானின் இளம் வயது பிரதமராக அபே முதன்முதலில் 2006ல் பதவியேற்றார். அரசியல் அவதூறுகள், மாயமான ஓய்வூதிய ஆவணங்கள் மீதான வாக்காளர்களின் சீற்றம் மற்றும் அவரது ஆளும் கட்சிக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வி என கடும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, உடல்நலக்குறைவு காரணமாக அபே பிரதமர் பொறுப்பில் இருந்து விலகினார்.
அபே ஒரு பணக்கார அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர், வெளிவிவகார அமைச்சராக அபேவின் தந்தை பணியாற்றியுள்ளார். மட்டுமின்றி ஜப்பானின் பிரதமராக அபேவின் பெரிய மாமாவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.