அதிமுக-வின் பிரபல முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான 52 இடங்களில் திடீர் சோதனை
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் கோயமுத்தூர் மாவட்டத்தின் பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர்.
கோயமுத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், கோவை மாவட்டத்தில் அனைத்து துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவிகிதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாநகரில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்து இருப்பதாகவும், பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இது தொடர்பாக டி.ஜி.பி உட்பட காவல் துறை உயரதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பி இருப்பதாகவும் ரகுநாத் தெரிவித்தார்.
இதே போல கோவை, வடக்கு கணபதிபுரம் வி.ஜி. ராம் நகர் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் என்பவரும் காவல் ஆணையரைச் சந்தித்து எஸ்.பி.வேலுமணி மீதும் அவரது உதவியாளர் மீதும் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் 2016 ஆம் ஆண்டு தான் காண்ட்ராக்ட் சம்பந்தமாக முன் தொகையாக 1 2கோடியே 20 லட்சம் கமிஷன் கொடுத்ததாகவும், ஆனால் சிவில் ஒர்க் பணிகள் ஒதுக்கீடு செய்வதாக கூறி பணத்தை பெற்ற அமைச்சர் அதன்பின் எனக்கு பணி ஒதுக்கவில்லை.
இப்படியே 2016 ஆம் ஆண்டிலிருந்து 5 ஆண்டுகள் ஓடிவிட்டது. தற்போது ஆட்சியும் மாறிவிட்டதால் பணத்தை திரும்பக்கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.
காவல் ஆணையரிடம் திருவேங்கடம் அளித்த புகாரில், எனக்கு 2002-ஆம் ஆண்டு முதல் எஸ்.பி.வேலுமணி பழக்கமானவர்.
முன் தொகையாக கமிஷன் கொடுத்தால் எனக்கு சிவில் ஒப்பந்த பணிகளை தருவதாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எஸ்.பி.வேலுமணி சொன்னதன் பேரில் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் ரோஜா இல்லத்திற்கு நேரில் சென்று ஒரு கோடி ரூபாய் மற்றும் 2016 ஆம் ஆண்டு ஜூலை 15 தேதியில் 20 லட்சம் ரூபாய் ஆக மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொடுத்தேன்.
பின்னர் அவர் சொன்னபடி அவருடைய பி.ஏ பார்த்திபனிடம் ஐந்து லட்ச ரூபாயையும் கொடுத்தேன். ஐந்து லட்சம் பணம் கொடுத்த விபரத்தை எஸ்.பி.வேலுமணியிடமும் சொல்லிவிட்டேன்.
ஆனால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொன்னபடி எனக்கு சிவில் ஒர்க் காண்ட்ராக்ட் ஒப்பந்த பணிகளை கொடுக்கவில்லை வேறு ஒப்பந்ததாரர்களுக்கு அப்பணிகளை கொடுத்துவிட்டார்.
பணியும் ஒதுக்காமல், வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறீர்களே என்று நான் சொன்னதற்கு நாங்கள் பணத்தை கொடுக்கிறோம், நீங்கள் பொறுத்திருங்கள் எங்களை அவசரப்படுத்தினீர்கள் என்றால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்த நிலையில் கோவை குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி வேலுமணியின் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல சென்னையில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களிலும் சென்னையில் 15க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் சகோதரர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சோதனை குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயராமன் மற்றும் முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இது திமுகவின் பழிவாங்கல் என்று கூறியுள்ளனர்.