வட கொரியாவின் 6 முன்னாள் உளவாளிகள் தென் கொரியாவிற்கு வைத்த கோரிக்கை
பல தசாப்தங்களாக தென் கொரிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ஆறு முன்னாள் உளவாளிகள் வட கொரியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர்க் கைதிகளாக
தற்போது 80 முதல் 96 வயதுடைய அந்த ஆண்கள், தங்கள் கம்யூனிச நம்பிக்கைகளை கைவிடாமல் நீண்ட கால தண்டனைகளை அனுபவித்துள்ளனர். தற்போது 95 வயதாகும் Ahn Hak-sop என்பவர் கொரியப் போரின் போது கைது செய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தென் கொரிய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்த 6 பேர்களில் இவரும் ஒருவர். இந்த 6 பேர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குடிமைக் குழு, அவர்களை வட கொரியாவிற்கு அனுப்பி வைக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டதாகக் கூறியது.
மட்டுமின்றி ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் அவர்கள் போர்க் கைதிகளாக நடத்தப்பட வேண்டும் என்றும் அக்குழுவினர் வாதிட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் தங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
விருப்பம் இல்லை
மேலும், இதேபோன்ற நிலைகளில் உள்ள மேலும் பல முன்னாள் குற்றவாளிகள் வடக்கிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி லீ ஜே மியுங், வட கொரியா உடனான உறவுகளை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ள நிலையிலேயே தற்போது இந்த 6 பேர்கள் வெளிப்படையான கோரிக்கையுடன் முன்வந்துள்ளனர்.
இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகமாகவே உள்ளன, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில், தென் கொரியாவுடன் உறவுகளை மேம்படுத்த வடக்கிற்கு விருப்பம் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |