மயக்கமடைந்து மரத்தில் தலைகீழாக தொங்கிய நிலையில் 6 வயது சிறுமி: வெளிவரும் கோர சம்பவம்
டெக்சாஸ் மாகாணத்தில் சிறுமி ஒருவர் மயக்கமடைந்து மரத்தில் தலைகீழாகத் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிய புயலில் சிக்கி, தனது வீட்டிலிருந்து நூற்றுக்கணக்கான அடி தூரத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளார் குறித்த 6 வயது சிறுமி.
Miriam Rios என்ற அந்த சிறுமி தற்போது ஆபத்தான கட்டத்தை கடக்கவில்லை என்றே மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினரின் மொபைல் குடியிருப்பும் மொத்தமாக சேதமடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை மாலை நேரம் வீசிய அந்த புயலானது மணிக்கு 165 மைகள் வேகம் கொண்டது என கூறப்படுகிறது. Miriam Rios மட்டுமின்றி, அவரது தாயார், தந்தை மற்றும் ஒருவயது குழந்தை எஸ்ரா உட்பட அனைவரும் ஆளுக்கு ஒரு திசையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
சிறுமி Miriam Rios-ன் தாயார் சம்பவத்தின் போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். புயலில் தூக்கி வீசப்பட்ட நிலையில் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. எஞ்சிய குடும்ப உறுப்பினர்களுக்கு பல கட்ட அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டுள்ளது.
இடுப்பு எலும்பு முறிவும், முதுகுத்தண்டில் காயமும் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர். இதனிடையே, சிறுமி Miriam Rios-ன் உறவினர் பொதுமக்களிடம் இருந்து நிதி சேகரிக்க முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளார். இதுவரை 40,000 டொலர் வரையில் நிதி குவிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சேதமடைந்த வீட்டை சீரமைக்கும் பொருட்டு, 80,000 டொலர் வரையில் திரட்ட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தின் சலாடோ நகரில் ஏற்பட்ட புயலில் சிக்கி 23 பேர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோவா மற்றும் மினசோட்டாவின் சில பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை சூறாவளி தாக்கியுள்ளது. தென்கிழக்கு மினசோட்டாவின் தாவோபி பகுதியில் உள்ள சிறிய விவசாய சமூகமானது சூறாவளியில் சிக்கி பேரழிவை எதிர்கொண்டுள்ளது.
நகரத்தின் பாதி வீடுகளை சூறாவளி சிதைத்துள்ளதுடன், உயரமான மரங்களை வேருடன் சாய்த்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.