மீண்டும் குலை நடுங்கவைத்த அமெரிக்கா... நான்கு சிறார்கள் உட்பட ஐவர் படுகொலை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், சிறையில் இருந்து தப்பிய கொடூர குற்றவாளி ஒருவர் நான்கு சிறார்கள் உட்பட ஐவரை படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தகவலை அடுத்து, அதிரடி நடவடிக்கை முன்னெடுத்த பொலிசார், தப்பிய சிறைக்கைதியை வாகனத்துடன் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்.
குற்றவாளி கோன்சாலோ லோபஸ் சிறையில் இருந்து தப்பிய பின்னர் கடைசியாக காணப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து நான்கு சிறார்கள் உட்பட ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த படுகொலை சம்பவத்திற்கும் குற்றவாளி கோன்சாலோ லோபஸுக்கும் தொடர்பிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு நம்புகிறது.
மேலும், தொடர்புடைய வீட்டில் இருந்து ஒரு வெள்ளை நிற செவ்ரோலெட் சில்வராடோ கார் மாயமாகியுள்ளது. அந்த திருடப்பட்ட காரை லோபஸுடன் பொலிசார் தடுத்து நிறுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
46 வயதான கோன்சாலோ லோபஸ் மே 12ம் திகதி சிறை அதிகாரி ஒருவரை கூரான ஆயுதத்தால் தாக்கிவிட்டு, வெளியே தப்பியுள்ளார். கைதிகள் சிலருடன் மருத்துவ சோதனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையிலேயே லோபஸ் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளார்.
தொடர்ந்து புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்த பொலிசார், அவர் தொடர்பில் உறுதியான தகவல் அளிப்பவர்களுக்கு 50,000 டொலர் வெகுமதியும் அறிவித்தனர்.
இதனிடையே, டெக்சாஸ் குற்றவியல் நீதித்துறை செய்தி தொடர்பாளர் ராபர்ட் ஹர்ஸ்ட் தெரிவிக்கையில், தெற்கு டெக்சாஸில் உள்ள வெப் கவுண்டியில் இதற்கு முன்பும் இது போன்று தப்பிச் சென்றார், அவர் கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் ஒளிந்திருந்தார் என குறிப்பிட்டுள்ளார்.