கருணைக்கொலைக்கு அனுமதி அளித்த ஐரோப்பாவின் நான்காவது நாடு
கத்தோலிக்க மத நம்பிக்கையாளர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, ஐரோப்பாவில் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கிய நான்காவது நாடாக போர்த்துக்கல் மாறியுள்ளது.
கருணைக்கொலை தொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று வாக்களிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி Marcelo Rebelo de Sousa ஒப்புதல் அளித்தால் மட்டுமே இது சட்டமாகும் என கூறப்படுகிறது.
ஆனால், தீவிர கத்தோலிக்க மத நம்பிக்கையாளரான ஜனாதிபதி மார்செலோ இதற்கு ஒப்புதல் அளிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
குறித்த சட்டத்தை நிராகரிக்கவும் அல்லது அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.
ஆனால் இதுவரை தமது நிலைப்பாட்டை ஜனாதிபதி தெரியப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆளும் சோசலிஸ்ட் கட்சி அதன் உறுப்பினர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதித்ததை அடுத்து இந்த மசோதா 136 க்கு 78 வாக்குகள் என நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி குறித்த பிரேரணையை நிராகரித்தாலும், அவரது முடிவை இன்னொரு வாக்கெடுப்பின் மூலம் மீற முடியும் என்றே கூறப்படுகிறது.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவர்களின் தனிப்பட்ட முடிவை சுதந்திரமாக எடுக்க இந்த பிரேரணை உதவும் என்றே சோசலிஸ்ட் எம்.பி. இசபெல் மொரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் மட்டுமே கருணைக்கொலை சட்டப்பூர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.