பிரான்சில் முதல் எபோலா பாதிப்பு உறுதி., சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு
பிரான்ஸ் சுகாதார அமைச்சகம், காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) மனிதாபிமான பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மருத்துவர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளது.
அவர் பிரான்சுக்கு திரும்பியதும் பரிசோதனையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அந்த மருத்துவர் தற்போது முன்னணி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய தொற்றுநோயியல் (epidemiological) விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் 21 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) தலைவர் டெட்ரோஸ் அடானோம், “பிரான்சில் எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலும், உலகளவில் பரவல் அபாயம் குறைவு. மக்கள் அச்சப்பட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவைத் தவிர 30-க்கும் குறைவான எபோலா பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த எபோலா பரவல், காங்கோவின் வடகிழக்கு இடுரி மாகாணத்தில் மே மாதத்தில் தொடங்கியது. தற்போது 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 277 பேர் உயிரிழந்துள்ளனர். உகாண்டாவிலும் சில நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். WHO, இந்த பரவலை “சர்வதேச சுகாதார அவசர நிலை” என அறிவித்துள்ளது.
இந்த முறை பரவியிருக்கும் வைரஸ் “புண்டிபுக்யோ” (Bundibugyo) வகை என அறியப்படுகிறது. இதற்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை இல்லை. UNICEF மற்றும் Gavi Vaccine Alliance, புதிய தடுப்பூசி உருவாக்குவது குறித்து மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.
பிரான்ஸ் அரசு, மக்கள் பீதியடையாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் உறுதியளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |