முறையற்ற பால் தொடர்பு... 200 ஆண்டுகளுக்கு பின்னர் முக்கிய முடிவெடுக்கும் பிரான்ஸ்
நீண்ட 200 ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக முறையற்ற பால் தொடர்பைத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரெஞ்சு அரசாங்கம் கூறியுள்ளது.
இரத்த உறவினர்களுடன் பாலியல் உறவுகளை தடைசெய்யும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் வரிசையில் இதனால் பிரான்சும் இணையவிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறார் நலத்துறை அமைச்சர் Adrien Taquet தெரிவிக்கையில், பிரான்ஸ் அரசாங்கம் 1791ம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக முறையற்ற பால் தொடர்பை தடை செய்ய இருக்கிறது என்றார்.
சிறார்களை இதில் தொடர்பு படுத்தாத வரை, உறவினர்களுடனான பாலியல் உறவுகள் பிரான்சில் தற்போது சட்டப்பூர்வமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது, இரு தரப்பினரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும் கூட, புதிய சட்டத்தின்படி, பாலின உறவில் ஈடுபடுவது குற்றமாகும்.
மேலும், புதிய சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டாலும், குறிப்பிட்ட சில சமூகத்தில் உறவினர்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால், இந்த புதிய தடையில் ஒரே குடும்பத்தில் வளரும் இன்னொரு தாய்க்கு பிறந்த பிள்ளைகள் சேர்க்கப்படுவார்களா என்பதை அமைச்சரால் உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிய வந்துள்ளது.
மேலும், விவாதங்கள் அனைத்தையும் புறந்தள்ள இருப்பதாக கூறியுள்ள அமைச்சரவை உறவினர்களுடனான பாலியல் உறவுகளை தடை செய்வதே எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளனர்.
1791ல் முறையற்ற பால் தொடர்பு, தெய்வ நிந்தனை மற்றும் சோடோமி ஆகியவை குற்றமற்றவை என பிரெஞ்சு புரட்சிகர படைகள் அறிவித்தது. இந்த நிலையில், 1980 களில் பிரபல அரசியல் விமர்சகர் Olivier Duhamel தனது இளம் வயது வளர்ப்பு மகனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
Olivier Duhamel தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார், ஆனால் குறித்த சம்பவம் குற்றமல்ல என்பதால் அவர் தண்டனை ஏதுமின்றி தப்பினார்.
இந்த விவகாரம் 2021ல் மீண்டும் விவாதப் பொருளாக மாறவும், கொந்தளிப்பை ஏற்படுத்தவும் செய்த நிலையில்,
18 வயதுக்குட்பட்ட நெருங்கிய உறவினருடன் உறவு கொள்வது குற்றம் என்று கடந்த ஆண்டு சட்டம் கொண்டுவந்தது பிரான்ஸ் அரசாங்கம்.