10 நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடுகடத்த பிரான்சுடன் பிரித்தானியா ஒப்பந்தம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த, பிரான்சுக்கு பிரித்தானியா ஒரு பில்லியன் பவுண்டுகள் கொடுப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளதைக் குறித்த செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தின் கீழ், 10 நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடுகடத்தும் திட்டம் ஒன்றும் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய உள்துறைச் செயலரின் அதிரடி திட்டங்கள்
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் பதவியேற்ற நாள் முதல், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருவது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே, அகதிகள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துகொள்ளும் திட்டத்தை இடைநிறுத்திவிட்ட நிலையில், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்காக எந்த எல்லை வரையும் செல்லவும் தயாராக உள்ளார் அவர்.
அதற்காக மறுப்பக்கம், அதாவது, பிரான்சுக்கே சென்று அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ஷபானா.
10 நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடுகடத்தும் திட்டம்
அவ்வகையில், பிரான்சுடன் சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார் ஷபானா.
இந்நிலையில், அந்த ஒப்பந்தம் குறித்த அதிரவைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்பவர்களில், 10 நாடுகளைச் சேர்ந்தவர்களை பிடித்து தடுப்புக் காவலில் அடைத்து, அவர்களை பிரான்ஸ் நாடுகடத்தவேண்டும் என்பது ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஒரு திட்டம்.

விடயம் என்னவென்றால், போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து தப்பி பிரித்தானியாவில் புகலிடம் கோருவதற்காக ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயல்பவர்களையும் விட்டுவைக்கக்கூடாது என பிரான்ஸ் பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வகையில், எரித்ரியா, ஆப்கானிஸ்தான், ஈரான், சூடான், சோமாலியா, எத்தியோப்பியா, ஈராக், சிரியா, வியட்நாம் மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளைக் குறிவைக்க பிரான்ஸ் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது.
இந்நிலையில், போருக்குத் தப்பி வருவபவர்களைக் கூட நாடுகடத்துவது வெட்கக்கேடானது, அது சட்டவிரோதமானதும் கூட என புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்புகள் விமர்சனம் முன்வைத்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |