ட்ரம்பிடம் மண்டியிட்ட ஐரோப்பிய ஒன்றியம்... வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்த பிரான்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இடையே ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை பிரான்ஸ் விமர்சித்துள்ளது.
இருண்ட நாள்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இது ஒரு இருண்ட நாள் என்று பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ சாடியுள்ளார். ஜனாதிபதி ட்ரம்பின் கண்மூடித்தனமான வரி அழுத்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் பணிந்து விட்டது என்றும் பிரதமர் பிரான்சுவா பேய்ரூ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட பிரான்சுவா பேய்ரூ, தங்கள் பொதுவான மதிப்புகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சுதந்திர நாடுகளின் கூட்டணி, அழுத்தத்தின் கீழ் மண்டியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.
அதே வேளை, பிரெஞ்சு ஐரோப்பிய விவகார அமைச்சர் பெஞ்சமின் ஹடாட், இந்த நிலைமை நல்லதல்ல என்றும், ஐரோப்பிய ஒன்றியம் எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பிரெஞ்சு வர்த்தக அமைச்சர் லாரன்ட் செயிண்ட்-மார்ட்டின் தெரிவிக்கையில், ட்ரம்ப் அதிகாரத்தின் மொழியை மட்டுமே புரிந்துகொள்கிறார். நாம் முன்கூட்டியே எதிர் நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஒப்பந்தம் சிறப்பாக அமைந்திருக்கலாம் என்றார்.
ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை தமது கருத்து எதையும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவிக்கவில்லை. மறுபுறம், ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்.
15 சதவீத வரி
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பெரும்பாலான பொருட்கள் 15 சதவீத வரியை எதிர்கொள்ளும், இது தற்போதைய 4.8 சதவீத வரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
மட்டுமின்றி, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில், ஐரோப்பாவிலிருந்து ஏற்றுமதியாகும் 70 சதவீதப் பொருட்களுக்கும் 15 சதவீத வரி பொருந்தும் என்றே தெரிய வந்துள்ளது.
இதில் கார்கள், மருந்துகள் மற்றும் மின்னணு சாதனங்கள் அடங்கும். இருப்பினும், விமான பாகங்கள், சில இரசாயனங்கள், குறைக்கடத்தி உபகரணங்கள் மற்றும் கார்க் போன்ற சில விவசாயப் பொருட்கள் வரிகளுக்கு உட்பட்டவை அல்ல.
மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிடமிருந்து 750 பில்லியன் டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 64 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசக்தியை வாங்கும்.
இதனுடன், ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவில் 600 பில்லியன் டொலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 51 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |