பேக்பேக் ஹீரோ! ஒட்டுமொத்த பிரான்ஸும் கொண்டாடும் போராளி., மக்ரோன் பாராட்டு
பிரான்ஸ் கத்திக்குத்து சம்பவத்தில் தாக்குதல்தாரியை தான் வைத்திருந்த முதுகுப்பை கொண்டு எதிர்த்த ஒரு நபரை ஒட்டுமொத்த நாடும் பாராட்டிவருகிறது.
பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய குழந்தைகள் மீதான கொடூரமான கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில், தாக்குதல்தாரியை எதிர்கொண்ட ஒரே நபரான 24 வயது இளைஞனை மக்கள் BackPack Hero என பாராட்டிவருகின்றனர்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவரை நேரில் சந்தித்து தனது பாராட்டை தெரிவித்தார்.
கையில் கத்தியுடன் வந்த ஒரு சிரியா நாட்டைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கியாளர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சரமாரியாக குத்திய சம்பவத்தின் வீடியோ வலைத்தளங்களில் வைரலானது.
அந்த நபர் 31 வயதான அப்தெல்மாசிஹ் ஹனூன் என அடையாளம் காணப்பட்டார்.
அதே வீடியோவில், தற்செயலாக அவ்வழியே வந்த 24 வயதான (Henri d’Ansleme) என்ற இளைஞர், தாக்குதல்தாரி குழந்தைகளை தக்க முயன்றபோது தான் வைத்திருந்த முதுகுப்பையை கொண்டு தாக்கி தடுத்து நிறுத்த முயன்றதும் பதிவானது.
சிரிய தாக்குதல்தாரி, ஹென்றியையும் தாக்க முயன்றார். தொடர்ந்து குழந்தைகளை தாக்க சென்றார். அவரைப் பின்தொடர்ந்து ஹென்றி ஓடிச்சென்று மீண்டும் தனது கனமான பையைக் கொண்டு அவரை தடுத்து நிறுத்த முயன்றார்.
அவர் தொடர்ந்து தன்னை தடுக்கவந்த காரணத்தினாலேயே தாக்குதல்தாரி அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். அப்போதும் ஹென்றி அவரைப் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் விரைவாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரிடம் அவர் சிக்கினார்.
ஹென்றி தனது உயிரையும் பணயம் வைத்து சம்பவத்தில் குறுக்கிடவில்லை என்றால், தாக்குதல்தாரி இன்னும் பல குழந்தைகளை தாக்கியிருக்கக்கூடும், மற்றும் பல உயிர்கள் பலியாகியிருக்கக்கூடும்.
செய்தியாளர்களிடம் பேசிய ஹென்றி, பிரான்சின் கதீட்ரல்களுக்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அன்னேசியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் ஒரு நபர் குழந்தைகளைத் தாக்குவதைக் கண்டதாகவும், அவர்களின் தாய் வெறித்தனமாக அவர்களைப் பாதுகாக்க முயன்றதாகவும், அதை பார்த்தபிறகே உதவி செய்ய சென்றதாக அவர் கூறினார்.
ஓட்டுமொத்த பிரான்ஸ் மக்களும் ஹென்றியை பாராட்டிவரும் நிலையில், அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இன்று (வெள்ளிக்கிழமை) அல்பைன் நகரத்திற்குச் சென்று ஹென்றியின் துணிச்சலுக்கு நன்றி தெரிவித்து கைகுலுக்கினார்.