இந்தியாவிலிருந்து வருபவருக்கு...முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரான்ஸ்
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் யாராக இருந்தாலும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு பிரான்ஸ் அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
"இந்திய மருத்துவமனைகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாகிய கவலைக்குரிய கோவிட் -19 வேரியன்ட் பரவுவதைத் தடுக்க, வரும் நாட்களில் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பிரான்ஸ் 10 நாட்கள் தனிமைப்படுத்தலை விதிக்கும்" என்று பிரான்ஸ் அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) புதன்கிழமை தெரிவித்தார்.
சில வாரங்களுக்கு முன்பு P1 கொரோனா வைரஸ் மாறுபாட்டைத் தடுக்க பிரேசிலில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் பிரான்ஸ் அரசு தடை விதித்தது.
சில நாட்களுக்குப் பிறகு, அர்ஜென்டினா, சிலி மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பயண விதிமுறைகளை பிரான்ஸ் அறிவித்தது.
இந்நிலையில் "இந்த பட்டியலில் இந்தியா சேர்க்கப்படுகிறது" என்று கேப்ரியல் கூறியுள்ளார்.
சமீபத்தில், பிரித்தானிய அரசாங்கம் அதன் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் 'சிவப்பு பட்டியலில்' இந்தியாவை சேர்த்தது.
மேலும், ஹொங்ஹொங் மற்றும் நியூசிலாந்து இந்தியா விமானங்களை முற்றிலுமாக தடைசெய்துள்ள நிலையில், முழுவதுமாக தடுப்பூசி போட்டவர்கள் கூட இந்தியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.