பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் எடுத்துள்ள அதிரடி முடிவு: முக்கிய நாடுகள் எதிர்ப்பு?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்
காசா மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவை தொடர்ந்து பிரான்ஸ் பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரண்டு நாடு தீர்வு குறித்த மாநாட்டில் பிரான்ஸ் இந்த முடிவை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வழங்கிய தகவலில், “பாலஸ்தீனத்தை இன்று அங்கீகரிப்பது என்பது போரை முடிவுக்கு கொண்டு வரும் ஒரே வழி” என தெரிவித்துள்ளார்.
மக்ரோனை தொடர்ந்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் “ இந்த நாள் அமைதிக்கு சிறந்த நாள்” என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இந்த முடிவை தொடர்ந்து வேறு சில ஐரோப்பிய நாடுகளும் இந்த முடிவை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனி நாடு அங்கீகாரம் கிடையாது
அதே நேரத்தில் அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் இரு-அரசு மற்றும் தனிநாடு முறையை அங்கீகரிக்கவில்லை என அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம் வழங்கிய சில முக்கிய ஐரோப்பிய நாடுகளின் முடிவுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும் இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திற்கான வெகுமதி” என்றும் “தனிநாடு” ஏற்படாது என்றும் சாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |