நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த அமெரிக்கா: இம்மானுவேல் மக்ரோன் வரவேற்பு
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி கைது
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல் ஆட்சி நடத்தி வருவதுடன், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது.

வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டது தொடர்பான புகைப்படத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இம்மானுவேல் மக்ரோன் வரவேற்பு
இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு இருப்பதை வரவேற்றுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தும் உள்ளார்.

மேலும் வெனிசுலா நாட்டு மக்கள் நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதாகவும், இது வெனிசுலா மக்களுக்கு திருப்புமுனை என்றும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி எட்மண்டோ கோன்சலஸின் புதிய தலைமைக்கு ஆதரவு அளிப்பதாகவும் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா நாட்டை அடுத்து தலைமை தாங்கும் நிர்வாகம் அமைதியான வழி, ஜனநாயக முறை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |