ஜனாதிபதி தேர்தலில் அவர் வென்றால்... இது நடக்கும்: எச்சரிக்கை விடுக்கும் மேக்ரான்
நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மரீன் லு பென் வென்றால், பிரான்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றும் ரகசிய திட்டம் அவருக்கு இருப்பதாக இமானுவல் மேக்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு ஏப்ரல் 24 ம் திகதி இடம்பெற உள்ளது.
இந்த நிலையில், முதல் சுற்று வாக்கெடுப்பில் கடுமையான போட்டி இருப்பதை உணர்ந்து கொண்ட இமானுவல் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்சை வெளியேற்றும் ரகசிய திட்டம் அவருக்கு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறுவது தொடர்பில் பொது வாக்கெடுப்பை நிராகரிக்கவும் லு பென் மறுத்துள்ளார். மட்டுமின்றி, பிரான்ஸ் யூரோ நாணயத்தை கைவிட வேண்டும் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேற வேண்டும் என்ற பரப்புரையில் முன்னர் லு பென் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆனால் தற்போது, இந்த தேர்தலில் அந்த பரப்புரைகளை கைவிட்டு, மக்கள் ஆதரவை பெறும் நோக்கில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
நடந்து முடிந்த முதல் சுற்றில், மேக்ரான் 27.8% வாக்குகள் பெற்றுள்ளதுடன் லு பென் 23.2% வாக்குகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும், தற்போதைய கருத்துக் கணிப்புகளின்படி ஜனாதிபதி மேக்ரான் இரண்டாவது முறையாக வெற்றி பெறுவார் என்றே தெரிய வந்துள்ளது.