பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு... கடும் கோபத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும்
செப்டம்பர் மாதம் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்க பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையாக கண்டித்துள்ளன.
பாலஸ்தீனிய மக்களின் நிலை
பிரான்சின் இந்த முடிவானது அக்டோபர் 7 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களை அவமானப்படுத்தும் செயல் என அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப்பது பயங்கரவாதத்திற்கு துணைபோகும் செயல் என்றும் இஸ்ரேலுக்கு இருத்தலியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கை இதுவென்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார்.
ஐரோப்பாவின் மிகவும் பலம்பொருந்திய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், பாலஸ்தீன அரசை தற்போது அங்கீகரிக்கும் அல்லது அங்கீகரிக்கத் திட்டமிடும் 142 நாடுகளில் ஒன்றாகும்.
காஸாவில் உள்ள இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்களின் நிலை மோசமடைந்து வருவது குறித்து சர்வதேச கவலைகள் எழுந்துள்ள நிலையிலேயே பிரான்ஸ் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய இராணுவத்தின் நடவடிக்கைகள் ஒரு மோசமான மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டிவிட்டுள்ள நிலையில், காஸா முழுவதும் பெருமளவிலான பட்டினி பற்றிய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 8 மாதங்களாக காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு உணவளிக்க மறுத்துவரும் இஸ்ரேல், அப்படியான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க முடியாது என மறுத்துள்ளது.
பிரான்சின் அர்ப்பணிப்பு
அப்பாவி பாலஸ்தீன மக்களின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு இஸ்ரேல் மட்டுமே பொறுப்பு என பிரான்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஜனாதிபதி மேக்ரான் நிர்வாகத்தின் இந்த முடிவை கடுமையாக சாடிய இஸ்ரேலின் துணைப் பிரதமர் யாரிவ் லெவின்,
இது பிரெஞ்சு வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் பயங்கரவாதத்திற்கு நேரடி உதவி அளிக்கும் முயற்சி என்றும் கூறினார். இதனிடையே, பாலஸ்தீன அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஹுசைன் அல்-ஷேக் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
மேலும், இது சர்வதேச சட்டத்திற்கான பிரான்சின் அர்ப்பணிப்பையும், பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமைகள் மற்றும் நமது சுதந்திர அரசை நிறுவுவதற்கான அதன் ஆதரவையும் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி மேக்ரான் வியாழக்கிழமை அறிவித்தார். பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் பிரான்ஸ் மிக முக்கியமான ஐரோப்பிய சக்தியாக இருக்கும் அதே வேளையில்,
ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஸா மீது குண்டுவீச்சைத் தொடங்கியதிலிருந்து பல நாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு தேச அந்தஸ்தை அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |