நான் ஐ.எஸ் தீவிரவாதி! பிரான்சையே உலுக்கிய சம்பவத்தில் சிக்கிய நபர் நீதிமன்றத்தில் சொன்ன அதிர்ச்சி தகவல்
பிரான்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 130 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குற்றவாளி நான் ஒரு ஐ.எஸ் அமைப்பின் போராளி என்று கூறியுள்ளான்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் உணவகங்கள், மதுபான விடுதிகள், கச்சேரி அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் என ஐ.எஸ் தீவிரவாதிகள், கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 130 பேர் உயிரிழந்தனர்.
400-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவனாக சந்தேகிக்கப்பட்ட Salah Abdeslam என்று அறியப்படும் 31 வயது மதிக்கத்தக்க நபர் மட்டுமே பொலிசாரிடம் சிக்கினான்.
ஏனெனில், தாக்குதல் நடத்திய தினத்தின் போது, அவன் வைத்திருந்த குண்டு வெடிக்காத காரணத்தினால், தப்பி ஓடிய இவனை நான்கு மாதங்களுக்கு பின்பு பிரெஸ்லஸில் வைத்து பொலிசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பிரான்ஸையே உலுக்கியதால், நவம்பர் 13 தாக்குதல் என்று கூறப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, le de la Cité நகரில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட Salah Abdeslam, விசாரணையின் போது நான் ஒரு ஐ.எஸ் தீவிரவாதி என்று கூறியள்ளான்.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த தாக்குதல் நடத்திய பின்பு ஐ.எஸ் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்களில் உயிரிழந்தவர்களை தவிர சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்தாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற விசாரணையை சந்திக்க வேண்டும்.
இவர்கள் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகள் மற்றும் கார்களை வழங்க உதவியதாகவும், அதுமட்டுமின்றி தாக்குதல்களை ஏற்பாடு செய்வதில் பங்கு வகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பிரான்ஸ் இராணுவம் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தீவிரவாத குழுவால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி இன்று நடைபெற்ற விசாரணையில், Salah Abdeslam, நான் ஒரு ஐ.எஸ் தீவிரவாதி, அதாவது நான் ஒரு ஐ.எஸ் போராளி என்று மட்டுமே கூறியுள்ளான். இதனால் இந்த விசாரணை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் வரும் 28-ஆம் திகதி முதல் நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.
அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் அனைவரிடமும் நவம்பரில் விசாரணை தொடங்கும் எனவும், இன்று நடைமுறைக்கான விசாரணை மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும், சுமார் எட்டு மாதங்களுக்கு மேல் நடைபெறும், இந்த விசாரணையின் தீர்ப்பு அடுத்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை பிரான்சில் மிகப் பெரிய வரலாற்று வழக்காக பார்க்கப்படுகிறது. இன்னும் பல மாதங்கள் இந்த வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால், குறித்த நீதிமன்றத்தை சுற்றி 1000-க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.