பிரான்சில் பயிற்சி மேற்கொண்ட நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் மாயம்
பிரான்ஸ் இராணுவத்தால் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் மாயமாகியுள்ள நிலையில், குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சியும் ஆயுதங்களும்
அனுமதியின்றி தப்பியோடியது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட வழக்குகளில் குற்றவியல் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பல்வேறு படையணிகளில் 155வது Mechanised Brigade என்ற Anne of Kyiv அணியும் ஒன்று.
மொத்தம் 4,500 இராணுவ வீரர்கள் இந்தப் படையணியில் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் சரிபாதி பேர்களுக்கு பிரான்ஸ் இராணுவம் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியிருந்தது.
இந்த நிலையில் 1,700 வீரர்கள் படையணியிலிருந்து போருக்குச் செல்லாமல் தப்பிச் சென்றதாகவும், 50 பேர் பிரான்சில் பயிற்சியின் போது தப்பிச் சென்றதாகவும் பிரபலமான பத்திரிகையாளர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் அம்பலப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்தே, இராணுவ அதிகாரி ஒருவரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தப்பியோடியது குறித்து குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக உக்ரைனின் தேசியப் புலனாய்வுப் பணியகம் கூறியது.
சோர்வுடன் உக்ரைன் ராணுவம்
இந்த நிலையில் உக்ரைன் அமைச்சர் Mariana Bezugla கடந்த மாதம் தெரிவிக்கையில், தொடர்புடையப் படைப்பிரிவு திறம்பட அகற்றப்பட்டு மற்ற பிரிவுகளில் மறுபகிர்வு செய்யப்பட்டது என்றார்.
இந்த விவகாரத்தில் பிரான்ஸ் இராணுவம் தலையிட்டும், குறித்த படையணியை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டும் ரஷ்யா கிட்டத்தட்ட 4,000 சதுர கிலோமீற்றர்கள் உக்ரைனுக்குள் முன்னேறியுள்ளது. ஆனால் 3 ஆண்டுகளாக நீடிக்கும் போரினால் ஆள் பற்றாக்குறை மற்றும் சோர்வுடன் உக்ரைன் ராணுவம் போராடி வருவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |