பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை ராஜினாமா செய்யக் கோரி சத்தமிட்ட மக்கள்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நேற்று கிழக்கு பிரான்சுக்குச் சென்றிருந்த நிலையில், நேரடியாக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
ராஜினாமா செய்யக் கோரி சத்தமிட்ட மக்கள்
பிரான்சில் ஓய்வு பெறும் வயதை, 62இலிருந்து 64ஆக உயர்த்தும் அரசின் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், ஜேர்மன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கிழக்கு பிரான்ஸ் பகுதி ஒன்றில் மக்களை நேரடியாக எதிர்கொண்டார் மேக்ரான்.
அப்போது, சிலர் ’மேக்ரான், ராஜினாமா செய்யுங்கள்’ என சத்தமிட்டனர். அத்துடன், போராட்டங்களின்போது மக்கள் பாடும் ஒரு பாடலையும் சிலர் பாடத் துவங்கினர்.
ஒருபக்கம் இப்படி ஒரு சத்தமான எதிர்ப்பை சந்தித்த மேக்ரான், இன்னொரு பக்கம் அமைதியான ஒரு எதிர்ப்பையும் எதிர்கொண்டார்.
AP
மரத்தால் கட்டிடங்களை உருவாக்கும் நிறுவனம் ஒன்றிற்கு மேக்ரான் செல்ல, அங்கு வலது சாரி நாடாளுமன்ற உறுப்பினரான Emmanuel Fernandes, ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் சட்டத்தை வலுக்கட்டாயமாக திணித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தன் வாயில் பிளாஸ்டர் ஒட்டியவண்ணம் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
அந்த பிளாஸ்டரில், ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் சட்டத்தை வலுக்கட்டாயமாக திணிப்பதற்காக அரசு பயன்படுத்திய, அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு எண்ணைக் குறிக்கும் வகையில் 49-3 என்று எழுதப்பட்டிருந்தது.