பிரான்சிலிருந்து வெளிநாடொன்றிற்கு குடிபெயர்ந்த பிரித்தானியர் சந்தித்த பிரச்சினை
பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியர் ஒருவர், அவுஸ்திரேலியாவில் வாழும் தன் பிள்ளைகளுடன் வாழ்வதற்காக அங்கு குடிபெயர்ந்துள்ளார்.
சந்தித்த பிரச்சினை
பிரித்தானியரான கொலின் டையர், 1988ஆம் ஆண்டு பிரான்சில் ஒரு வீடு வாங்கி, 2020ஆம் ஆண்டு நிரந்தரமாக அந்த வீட்டில் குடியேறியுள்ளார்.
அவரது மகள்களில் ஒருவர் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவந்த நிலையில், மகளுடன் வாழ்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கே சென்றுவிடலாம் என பின்னர் முடிவெடுத்துள்ளார் அவர்.

பிரான்சிலிருக்கும் தன் உடைமைகளை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்வதற்காக Amoov என்னும் நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளார் டயர்.
அவர் முதல் கட்டமாக Amoov நிறுவனத்துக்கு 2,844 யூரோக்கள் செலுத்த, அந்நிறுவனம் அவரது உடைமைகளை லொறி ஒன்றில் ஏற்றிச் சென்றுள்ளது.
2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மீதமுள்ள 8,107 யூரோக்களை செலுத்திவிட்டு தன் உடைமைகள் வரும் என்று காத்திருந்த டயருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதாவது தன் உடைமைகள் வந்துவிடும் என் அவர் காத்திருக்க, பொருட்கள் அப்போதும் வரவில்லை.
பிறகு Amoov நிறுவனம் டயரின் தொலைபேசி அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும் பதிலளிப்பதை நிறுத்திவிட்டுள்ளது.
அதற்குப் பிறகுதான் டையருக்குத் தெரிந்துள்ளது, Amoov நிறுவனம் தன்னைப்போலவே பலரிடம் பணம் வாங்கிவிட்டு அவர்களுடைய பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளது என்பது.
மீண்டும் பிரான்சுக்குச் சென்று பொலிசில் நடந்ததை புகைப்பட ஆதாரத்துடன் விளக்கி டயர் புகாரளிக்க, அவரது பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பாரீஸ் அருகிலுள்ள ஒரு நிறுவனத்தில் நிற்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளார்கள்.
அந்த லொறி, Amoov நிறுவனத்தின் ஒரு துணை ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்குச் சொந்தமானது என தெரியவரவே, அவர்களிடம் விசாரித்தால், டயருடைய பொருட்கள் தங்களிடம்தான் உள்ளன என்றும், தங்களுக்குப் பணம் கொடுக்கப்படாததால் தாங்கள் அவற்றை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பவில்லை என்றும் அந்நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.
அதற்கு மேல் தாங்கள் அந்த விடயத்தில் தலையிடமுடியாது என பொலிசார் கூறிவிட, நேரடியாக தானே அந்த நிறுவனத்திடம் சென்று பேசியுள்ளார் டயர்.
தங்களுக்கு Amoov நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்றும், பணம் கொடுத்தால் பொருட்களை அனுப்பிவிடுவதாகவும் அந்த ஒப்பந்ததாரர் நிறுவனம் கூற, வேறு வழியில்லாமல் மீண்டும் 12,600 யூரோக்கள் செலுத்தியுள்ளார் டயர்.
அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் டயரின் பொருட்கள் அவுஸ்திரேலியாவை அடைய, பிப்ரவரி மாதம் அவற்றை வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளார் டயர்.
விடயம் என்னவென்றால், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம், Amoov நிறுவனம் திவாலாகிவிட்டதாக அறிவித்துள்ளது.
ஆக, வழக்குத் தொடர்ந்தாலும் Amoov நிறுவனத்திடமிருந்து பணத்தை திருப்பிப் பெறுவது கடினமே என்று கூறியுள்ளார் டயரின் சட்டத்தரணி.
டயரைப் போலவே பலர் Amoov நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், இப்படி பொருட்களை எங்காவது அனுப்பவேண்டுமானால், நம்பகத்தன்மை உடைய நிறுவனம்தானா என விசாரித்து அறிந்து அனுப்புமாறும், பணம் செலுத்துவதும், டெபிட் கார்டு அல்லது பேங்க் ட்ரான்ஸ்ஃபர் மூலம் செலுத்தாமல் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தவும் ஆலோசனை கூறியுள்ளார் டயர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |