லெபனானில் கொல்லப்பட்ட பிரெஞ்சு வீரர்: ஐ.நா கண்டனம்: ஹிஸ்புல்லா அமைப்பு மறுப்பு
லெபனானில் ஐ.நா அமைதிப்படை சேர்ந்த பிரெஞ்சு ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா பிரெஞ்சு வீரர் கொலை
தெற்கு லெபனானில் சனிக்கிழமை காலை ரோந்து படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், பிரெஞ்சு ராணுவ வீரர் நேரடியாகத் துப்பாக்கிக் குண்டு காயத்திற்கு உள்ளானார், மேலும் இந்தத் தாக்குதலில் மற்ற மூவர் காயமடைந்துள்ளனர்.
ஐ.நா அமைதிப் படையை சேர்ந்த பிரெஞ்சு வீரரின் உயிரை காப்பாற்ற உயிர் காக்கும் முயற்சிகள் நடத்தப்பட்டது. இருப்பினும் அவர் துரதிர்ஷ்டவசமாக தனது காயங்களால் உயிரிழந்தார்.

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
முதற்கட்ட தகவலின் படி, 2 ஐ.நா நிலைகளுக்கு இடைப்பட்ட சாலையில் ஹிஸ்புல்லா வெடிமருந்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்செயலாளர் கண்டனம்
இந்நிலையில் தெற்கு லெபனானில் ஐ.நா அமைதிப்படை சேர்ந்த பிரெஞ்சு ராணுவ வீரர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஐ.நா பணியாளர்களை இலக்கு வைத்து தாக்குவது என்பது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்று ஐ.நா பொது செயலாளர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாக ஐ.நா சந்தேகங்களை முன்வைத்தாலும், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஹிஸ்புல்லா அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |