உக்ரைன் போர்: பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் திகதியில் மாற்றம் செய்யப்படுமா?
பிரான்ஸ், ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகிவரும் நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.
அதனால் பிரான்ஸ் தேர்தலில் ஏதாவது மாற்றம் செய்யப்பட உள்ளதா?
குறிப்பாக, தேர்தல் திகதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதா?
அப்படி நடக்க வாய்ப்பில்லை என்கிறது பிரான்ஸ் அரசு!
பிரெஞ்சு மக்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கடிதத்தில், நாட்டின் ஜனநாயகம் தொடர்பான விடயங்கள் தொடர்ந்து நடப்பது அவசியம் என்றும், அதே நேரத்தில், உக்ரைன் பிரச்சினையால் தன்னால் அதிக அளவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசின் அரசியல் சாசனத்தில் 6ஆவது பிரிவு, இந்த விடயத்தைக் குறித்து தெளிவாக கூறியுள்ளது. நாட்டின் தலைவர், சர்வதேச வாக்களிக்கும் உரிமைப்படி, அதாவது தேர்தல் மூலம் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்கிறது அது.
அத்துடன், பிரிவு 7ம், ஜனாதிபதி பொறுப்பிலிருப்பவரின் பதவி முடிவடைவதற்கு 20 நாட்கள் முன்பு, அல்லது அதிகபட்சம் 35 நாட்களுக்கு முன்பு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்கிறது.
பிரான்ஸ் ஜனாதிபதியாக இருக்கும் இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் மே மாதம் 13ஆம் திகதி முடிவடைகிறது. ஆக, தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பில்லை எனலாம்.
பிரான்சைப் பொருத்தவரை, வாக்கெடுப்பு இரண்டு சுற்றுகளாக, இரண்டு வார இடைவெளியில் நடைபெறும், அத்துடன், மக்கள் வாக்களிக்க வசதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
இப்போதைக்கு, ஏப்ரல் 10 மற்றும் 24 திகதிகளில் தேர்தல் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, அது ஏப்ரல் 17 மற்றும் மே 1ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்படலாம். ஆனாலும், ஒரு வார வித்தியசாத்தில் என்ன நன்மை இருக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
மேலும், ஏப்ரல் 17/ மே 1க்குப் பிறகு தேர்தலைத் தள்ளிவைக்கவேண்டுமானால், அதற்காக அரசியல் சாசனத்திலேயே ஒரு மாற்றம் கொண்டுவரவேண்டியிருக்கும் அல்லது அரசியல் சாசனத்தையே ரத்து செய்யவேண்டியிருக்கும்.பிரான்ஸ் வரலாற்றில் அப்படி நடப்பது வழக்கமான ஒன்று அல்ல!