சொன்னதைச் செய்துள்ள பிரான்ஸ்... நாடாளுமன்றத்தில் புதிய புலம்பெயர்தல் மசோதா விவாதத்துக்கு ஏற்பு
கடந்த நவம்பரில் புதிய புலம்பெயர்தல் சட்ட மசோதா குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சரும் தொழிலாளர் துறை அமைச்சரும் அறிவிப்பு ஒன்றைச் செய்திருந்தார்கள்.
அந்த மசோதா, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையன்று அந்த மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய புலம்பெயர்தல் சட்டம் என்ன மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது என்று சுருக்கமாக பார்க்கலாம்.
குடியிருப்பு அனுமதி அட்டை பெற மொழித்தேர்வுகள்
இனி பிரான்சில் நீண்டகால குடியிருப்பு அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், தாங்கள் பிரெஞ்சு மொழியில் குறிப்பிட்ட அளவுக்கு புலமை பெற்றுள்ளோம் என்பதை நிரூபிக்கவேண்டும்,
நாட்டின் கொள்கைகளை மதிக்காதவர்களை எளிதாக வெளியேற்ற வழிவகை
முன்பு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் முதலானோர் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலை இருந்த நிலையில், இனி நாட்டின் கொள்கைகளை மதிக்காதவர்களே எளிதாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படலாம்.
பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிவரும் துறைகளுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி அட்டைகள்
இது குறிப்பாக ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கானது. ’முறைப்படி இல்லாமல்’ ஏற்கனவே பிரான்சில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் சில நிபந்தனைகளின்பேரில், பணியாளர் தட்டுப்பாட்டால் திணறிவரும் துறைகளில் பணி செய்வதற்காக ஓராண்டு காலகட்டத்திற்காக இந்த தற்காலிக குடியிருப்பு அனுமதி அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
மருத்துவத்துறைப் பணியாளர்களுக்காக சிறப்பு குடியிருப்பு அனுமதி அட்டைகள்
மருத்துவத்துறைப் பணியாளர்களுக்காக சிறப்பு குடியிருப்பு அனுமதி அட்டை ஒன்று திட்டமிடப்பட்டுவருகிறது. இது பிரெஞ்சு மருத்துவமனைகளில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக...
கடத்தல்காரர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை
ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்குள் கொண்டு வருவதை ஏற்பாடு செய்யும் மக்கள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. அவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறையும், 1.5 மில்லியன் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக ’பிரான்ஸ் புகலிடக்கோரிக்கை மையங்கள்’
புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக ’பிரான்ஸ் புகலிடக்கோரிக்கை மையங்கள்’ பல அமைக்க சட்ட மசோதாவில் திட்டம் உள்ள நிலையில், புகலிடக்கோரிக்கை நடவடிக்கைகளை அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்குள் முடிக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சரான Gérald Darmanin.
ஆக, புதிய புலம்பெயர்தல் சட்ட மசோதா குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சரும், தொழிலாளர் துறை அமைச்சரும் சொன்னதைச் செய்துவிட்டார்கள்.