பறக்கும் விமானத்தில் வழிந்தோடிய கழிப்பறை தண்ணீர்: அவசரமாகத் தரையிறக்கப்பட்ட புத்தம் புதிய விமானம்
Frontier Airlines Airbus plane makes emergency landing: ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய ஏர்பஸ் விமானத்தின் கழிப்பறையிலிருந்து தண்ணீர் வெளியே வழிந்தோடியதால், அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானிகள் அஞ்சியதால்
ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானம் 3566, புதன்கிழமை அன்று பகல் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெட்ராய்ட் மெட்ரோ விமான நிலையத்திற்குப் புறப்பட்டது, ஆனால் குழாய் ஒன்று திடீரென்று உடைந்ததால் அந்த விமானம் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

மின்னணு சாதனங்களில் தண்ணீர் பட்டுவிடும் என விமானிகள் அஞ்சியதால், புதிய ஏர்பஸ் இரட்டை எஞ்சின் விமானம் மத்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்குச் சற்று முன்னதாக சிகாகோ ஓ'ஹேர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில், விமானத்தின் முன்புறக் கழிப்பறையில் உள்ள குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக, விமானத்தின் தரைப்பகுதியில் தண்ணீர் வழிந்தோடியதாக அந்த விமான நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, விமானி சிகாகோ ஓ'ஹேர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கக் கோரினார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது, மட்டுமின்றி இச்சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, படைவீரர் தினத்தன்று ஃபிரான்டியர் விமானத்தில் பயணம் செய்த முன்னாள் இராணுவ வீரரான கீகன் மோரிஸ், வழிந்தோடிய கழிப்பறை தண்ணீரை புகைப்படங்களாகவும் காணொளியாகவும் பகிர்ந்துகொண்டார்.

மேலும், ஃபிரான்டியர் ஏர்லைன்ஸின் புத்தம் புதிய விமானம் நடுவானில் வெள்ளத்தில் மூழ்கியதைக் கருத்தில் கொண்டு, வேறு ஒரு விமான நிறுவனத்தில் எனக்கு மாற்றுப் பயணச் செலவை அவர்கள் ஏன் ஏற்கவில்லை என்பதை அந்நிறுவனத்தில் உள்ள யாராவது தயவுசெய்து விளக்க முடியுமா? என்றும் மோரிஸ் பதிவிட்டுள்ளார்.
விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவு விமானக் கட்டணத்தில் ஒரு பகுதியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், தான் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடைய மேலும் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்பதிவு செய்ய வேண்டாம்
புதன்கிழமை அன்று சிகாகோவிலிருந்து, தான் தங்கிச் செல்ல வேண்டிய இடமான டெட்ராய்ட்டுக்கு விமானம் கிடைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாக மோரிஸ் மேலும் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் விரக்தியளிப்பதாகக் கூறிய அவர், ஃபிரான்டியர் நிறுவனத்தில் முன்பதிவு செய்ய வேண்டாம் என வலியுறுத்தி, அந்தப் பதிவைப் பகிருமாறு தனது பின்தொடர்பவர்களைக் கேட்டுக்கொண்டார்.

விமானத்தில் இருந்த பயணி ஒருவர், தற்செயலாக அதே விமானத்தில் பயணம் செய்த பிளம்பர் ஒருவர் தண்ணீரை நிறுத்தியதாகவும், ஆனால் அதற்குள்ளாகவே விமானத்தின் உட்புறத்தில் தண்ணீர் தேங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஃபிரான்டியர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த விமானம் பராமரிப்புப் பணிகளுக்காக M40 நுழைவாயிலில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பயணிகளை டெட்ராய்டுக்கு அழைத்துச் செல்ல மாற்று விமானம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.