ஈரானுடன் அமெரிக்காவிற்கு எந்த ஒப்பந்தமும் தேவையில்லை... கொந்தளித்த ட்ரம்ப்
Trump says US does not need Iran deal: ஈரான் ஒப்பந்தம் அமெரிக்காவிற்குத் தேவையில்லை என்று ட்ரம்ப் கூறுகிறார்.
ஈரானுடன் எந்த ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவிற்குத் தேவையில்லை என்று ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
அதிருப்தி
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவரும் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸிடம், ஜனநாயகக் கட்சியினரின் நிர்வாகத்திலுள்ள நகரங்கள் மற்றும் மாகாணங்களில் நிலவும் குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் விவகாரங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்துமாறும் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

ஈரானின் கடும்போக்குடைய பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் நேருக்கு நேர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து வேன்ஸ் பரிசீலித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட ஒரு நாளுக்குப் பிறகும்,
குடியரசுக் கட்சியினரின் இடைக்காலத் தேர்தல் படுதோல்விக்கு ஈரானுடனான பெரும் செலவை ஏற்படுத்திய போரே காரணம் என்று துணை ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒரு வாரத்திற்குப் பிறகும் ட்ரம்பின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு, எட்டு மாதங்களாக நீடிக்கும் மோதலில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஈரான் அதிக விருப்பம் காட்டக்கூடும் என்று அண்மைய வாரங்களில் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரது தற்போதைய கருத்துகள் அவரது அணுகுமுறையில் ஒரு மாற்றத்தைக் காட்டுகின்றன.
ஆனால், ஈரானுடன் போர் தொடங்கி, அமெரிக்கா நாளுக்கு நாள் பின்னடைவை எதிர்கொண்டுவருவதாக தகவல் கசிந்ததன் பின்னர், ஈரான் ஒரு ஒப்பந்தத்திற்காக கெஞ்சும் நிலையில் உள்ளது என ட்ரம்ப் கூறி வந்தார்.
அவரின் பேச்சுக்களில் உண்மை இல்லை என்று ஈரானும் பதிலளித்து வந்தது. மத்திய கிழக்கு நாடுகளின் கடும் அழுத்தம் காரணமாக ட்ரம்ப் நிர்வாகமே ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்திற்காக தீவிரம் காட்டி வந்ததும் பின்னர் அம்பலமானது.
இந்த நிலையில், தற்போது தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானுடன் நமக்கு எந்த ஒப்பந்தமும் தேவையில்லை. அந்த காலம் எப்போதோ கடந்துவிட்டது. அவர்களின் பணம், நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள், நம்மிடம் உள்ளது; அதேபோல், அவர்களின் நீரிணையும் நம் கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
ஈரானுக்கு அருகில் உள்ள முக்கியமான கப்பல் பாதையான ஹார்முஸ் நீரிணையில், சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பான பாதையை பாதுகாக்க அமெரிக்க இராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரைச் சந்திப்பது குறித்து வேன்ஸ் பரிசீலித்து வருவதாக 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' புதன்கிழமை செய்தி வெளியிட்டது; இத்தகைய சந்திப்பு நிகழ்ந்திருந்தால், அது வேன்ஸை அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மையப்புள்ளிக்குக் கொண்டு வந்திருக்கும்.
பொதுவாக இது போன்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தனது மருமகனை ஈடுபடுத்தி வரும் ட்ரம்ப், தற்போது அந்த நகர்வை வேன்ஸ் முன்னெடுப்பதும், அதனால் அரசியல் ரீதியாக வேன்ஸ் பலனடையக் கூடும் என்பதாலையே ஈரான் விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டாம் என மறைமுகமாக அவருக்கு ட்ரம்ப் உத்தரவிடுவாதாக கூறுகின்றனர்.

2028-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருப்பவராகக் கருதப்படும் வேன்ஸ், இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் ஜனநாயகக் கட்சியினரிடம் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த வாரம் ஈரான் போர் விவகாரத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.
கட்சியின் இழப்புகளுக்கு ஈரான் போரின் செலவுகளும் ஒரு காரணம் என துணை ஜனாதிபதி குற்றம் சாட்டினார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற முந்தைய பரிந்துரை ஒரு சிறந்த ஆலோசனை என்றும் அவர் கூறினார்.
ஆனால், பல காலங்களாக இஸ்ரேலால் கூறப்படும் ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க வேண்டும் என்ற கருத்தையே மீண்டும் வலியுறுத்திய ட்ரம்ப், இந்தப் போர் அவசியம் என்று நியாயப்படுத்தியதுடன், வேன்ஸின் நிலைப்பாட்டிற்கும் பதிலளித்தார்.