கொசுக்களை கவர்ந்து கொல்லும் பூஞ்சை: ஒரு அரிய ஆய்வு
மலேரியா, சிக்குன்குன்யா, டெங்கு போன்ற பயங்கர நோய்களைப் பரப்பும் கொசுக்களால் ஆண்டோன்றிற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள்.
சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமானோர், கொசுக்களால் பரவும் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள்.
இந்நிலையில், கொசுக்களை அழிக்க பூஞ்சை ஒன்றை மரபியல் மாற்றத்துக்கு உட்படுத்தியுள்ளார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள் சிலர்.
கொசுக்களை கவர்ந்து கொல்லும் பூஞ்சை
உயிரிழந்து கிடந்த சில பூச்சிகளின் உடலில் Metarhizium என்னும் பூஞ்சை வளர்ந்துள்ளதை ஆய்வாளர்கள் தற்செயலாக கவனித்துள்ளார்கள்.

அப்படி பூஞ்சையால் பாதிக்கப்பட்ட அந்த பூச்சிகளின் உடலில், longifolene என்னும் ரசாயனம் வெளியாவதையும் ஆய்வாளர்கள் கவனித்துள்ளார்கள்.
இந்த longifolene என்னும் ரசாயனம், மகரந்தச் சேர்க்கைக்காக பூச்சிகளை கவர்ந்திழுக்க சில தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் இனிய வாசனையுடைய ஒரு ரசாயனம் ஆகும்.
ஆக, உயிரிழந்துகிடந்த பூஞ்சையால் பாதிக்கப்பட்ட அந்த பூச்சிகளின் உடலில் longifolene உருவாக, அந்த வாசனையால் உயிருள்ள கொசுக்கள் கவர்ந்திழுக்கப்படுவதை கவனித்த ஆய்வாளர்கள், அதையே கொசுக்களைக் கொல்ல பயன்படுத்தும் பொறியாக பயன்படுத்தமுடியுமா என்பதை அறிவதற்காக ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்கள்.
அதன்படி, இனிய வாசனையுடைய longifoleneஐ உருவாக்கும் ஜீனை, Metarhizium பூஞ்சையின் உடலில் பொருத்தியுள்ளார்கள்.
விளைவு, புதிதாக உருவாகும் Metarhizium பூஞ்சை, பூச்சிகளைக் கவரும் அதிக வாசனையை வெளிப்படுத்த, கொசுக்கள் அந்த வாசனையால் ஈர்க்கப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த ஆய்வு, உலகிலுள்ள மொத்த கொசுக்களையும் அழிப்பதற்கான் ஆய்வு அல்ல என்று கூறும், ஆய்வை மேற்கொண்டுவரும் மேரிலேண்ட் பல்களை ஆய்வாளர்களில் ஒருவரான Raymond St. Leger, இது வீடுகளில் அல்லது அதிகபட்சமாக கிராமங்களில் மக்கள் வாழும் இடங்களில் உள்ள கொசுக்களை அழிப்பதற்காக மட்டுமே என்கிறார்.
ஆக, அடுத்தபடியாக, சோதனை முறையில் இந்த பூஞ்சைகளை பயன்படுத்தி கொசுக்களை அழிப்பதை மக்கள் வாழும் இடங்களில் செய்துபார்க்க இருக்கிறார்கள்.
குறிப்பாக, ஆண்டுக்கு லட்சக்கணக்கானோர் கொசுக்களால் பரவும் நோய்களுக்கு பலியாகிவரும் ஆப்பிரிக்க நாடுகளில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |