ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும்... கோபத்தில் கொந்தளித்த ஜனாதிபதி ட்ரம்ப்
அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட தோல்விக்காக ரஷ்யா புதிய சுற்று கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கடும் கோபத்தில் ட்ரம்ப்
உக்ரைன் போர் தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை கட்டாயப்படுத்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை கட்டாயப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது தாம் கோபத்தில் இருப்பதாக ட்ரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிற்கு புதிய தலைமை தேவை என்று இந்த வாரம் வலியுறுத்திய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நம்பகத்தன்மை மற்றும் சட்டபூர்வமான தன்மையை கேள்விக்குள்ளாக்கியதை அடுத்தே டொனால்டு ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிரது.
முன்னர் ஜெலென்ஸ்கி மீது நம்பிக்கை இல்லாத ட்ரம்ப், போருக்கு காரணமே அவர் தான் என விமர்சனம் செய்திருந்தார். ஆனால் தற்போது ரஷ்ய ஜனாதிபதியின் சமீபத்திய நகர்வுகளால் உக்ரைனுக்கு ஆதரவளிக்கவே ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், ரஷ்ய பொருளாதாரம் மொத்தமாக முடக்கப்படும் சூழல் உருவாகும் என்றும், இதில் ரஷ்யாவிலிருந்து வரும் எண்ணெய் மீது 25 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் எனவும்,
ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் இனி அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை முன்னெடுக்கவே உக்ரைன் விரும்புவதாகவும், ரஷ்யாவை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்த வழிகள் தேடுவதாகவும்,
பாதுகாப்பு உத்தரவாதம் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும், உக்ரைனின் அடுத்தகட்ட நகர்வுகள் இதுவென்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இப்போதைக்கு, இந்தப் போரை மேலும் நீடிக்க ரஷ்யா சாக்குப்போக்குகளைத் தேடுகிறது.
பொருளாதாரம் முடக்கப்படும்
2014 முதல் புடின் விளையாடிய அதே விளையாட்டையே தற்போதும் விளையாடுகிறார் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். இது அனைவருக்கும் ஆபத்தாக முடியும் என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி,
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமைதியை நாடும் நமது அனைத்து உலகளாவிய பங்காளிகளிடமிருந்தும் பொருத்தமான பதில் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையிலேயே தற்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்யா மீது தாம் கோபத்தில் இருப்பதாக பதிலளித்துள்ளார். ரஷ்யா தொடர்பில், பல நாடுகளுக்கும் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் எவரும் தங்கள் தயாரிப்புகளை, எண்ணெயை மட்டுமல்ல, எந்தவொரு பொருளையும் அமெரிக்காவிற்கு விற்க முடியாது என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராகவில்லை என்றால், மொத்த பொருளாதாரமும் முடக்கப்படும் நெருக்கடி உருவாகும் என்றே ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |