பொலிஸ் முன்னிலையில் கேங்க்ஸ்டர் அதிக் அகமது சுட்டுக் கொலை! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்: வீடியோ
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் இன்று பொலிஸார் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பொலிஸார் முன்னிலையில் பயங்கரம்
உத்தரபிரதேச மாநிலத்தில் குறைந்தது 100 கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்ட கேங்க்ஸ்டர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.
அதிக் அகமது கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று இருப்பதுடன், 2005 பகுஜன் சமாஜ் கட்சி எம் எல் ஏ ராஜு பால் கொலை மற்றும் இந்த ஆண்டு பிப்ரவரியில் கொல்லப்பட்ட எம்.எல்.ஏ-வின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை ஆகியவற்றில் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.
செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள சிறையில் இருந்து அதிக் அகமது உத்தர பிரதேச மாநிலத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
தான் சுட்டுக் கொல்லப்படுவேன் என முன்னரே குற்றம்சாட்டிய அதிக் அகமது, தனது குடும்பத்தை காப்பாற்றுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தார்.
இந்நிலையில் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் இன்று உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்கள் பல முறை சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
There is no law, there is no order - Only Encounter! UP, India. pic.twitter.com/8aNoM8D23M
— Ashok Swain (@ashoswai) April 15, 2023
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அவர்கள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது கேமராக்கள் முன்னிலையில் அரங்கேறியது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 பேர் கைது
NDTV-யிடம் கொலை செய்யப்பட்ட கும்பலின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா பேசிய போது, மக்கள் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் மீது மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டார் என தெரிவித்துள்ளார்.
அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர்களுடன் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா அவர்களுடன் நின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் செய்தியாளர்கள் போல் மாறுவேடமிட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு உ.பி.யின் ஜான்சியில் நடந்த என்கவுன்டரில் அதிக் அகமதுவின் மகன் ஆசாத்தும் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.