பல ஐரோப்பிய நாடுகளை திண்டாட வைத்த உக்ரைனின் முடிவு... பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஜெலென்ஸ்கி
ரஷ்ய எரிவாயு விநியோகம் தொடர்பிலான நெருக்கடிக்கு தீர்வு காணும் பொருட்டு ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோவிடம் பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கு அழுத்தமளிக்கும்
கடந்த 10 ஆண்டுகளாக உக்ரைன் ஊடாக விநியோகிக்கப்பட்டுவந்த ரஷ்ய எரிவாயு திட்டத்தை புத்தாண்டுடன் முடிவுக்கு கொண்டுவந்தார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி.
இதனால் தங்கள் நாட்டுக்கு பொருளாதார இழப்பு இருந்தும், உக்ரைன் மீது கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யா போர் தொடுத்து வந்த நிலையிலும் எரிவாயு விநியோகம் முடக்கப்படவில்லை.
ஆனால், போரினை முடிவுக்கு கொண்டுவருவதே முறை என தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுக்கு அழுத்தமளிக்கும் வகையில், ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தை முடக்கியதுடன், ரஷ்யா உடனான ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் இந்த அதிரடி முடிவால், ஐரோப்பிய நாடுகள் பல திண்டாடியது. எரிவாயு விநியோகம் முடங்கியதால் தொழிற்சாலைகள் ஸ்தம்பித்தன. பனிக்காலம் என்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனின் முடிவை எதிர்த்து முதலில் மிரட்டல் விடுத்த ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ தற்போது ரஷ்ய எரிவாயு விநியோகம் முடங்கியது தொடர்பான சர்ச்சையைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்தார்.
ஐரோப்பா பல பில்லியன் யூரோ
அதனை ஏற்றுக்கொண்ட ஜெலென்ஸ்கி, தற்போது அவரை உக்ரைன் விஜயம் செய்யும்படி அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைனின் முடிவு, உக்ரைனை ஒட்டியுள்ள ஸ்லோவாக்கியாவிற்கு எரிவாயு விலை உயர்வு மற்றும் ஐரோப்பாவிற்கு எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டண இழப்பு ஆகியவற்றால் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஃபிகோ குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப தீர்வுகளைப் பற்றி விவாதிக்க உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள ஸ்லோவாக்கியாவில் ஒரு சந்திப்பு நடைபெற வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
அதை ஏற்றுக்கொண்ட ஜெலென்ஸ்கி, பிரதமர் ஃபிகோவை உக்ரைனுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே டிசம்பர் 22ம் திகதி ரஷ்யாவிற்கு சென்று இந்த விவகாரம் தொடர்பில் விளாடிமிர் புடினுடன் பிரதமர் ஃபிகோ விவாதித்துள்ளார்.
ஆனால், ஃபிகோவின் அந்த முயற்சியை உக்ரைன் கடுமையாக விமர்சித்திருந்தது. மேலும், உக்ரைன் வழியாக விநியோகிக்கப்படும் சுமார் 13.5 பில்லியன் கன மீற்றர் எரிவாயு முடக்கப்பட்டதால் ஏற்பட்ட எரிவாயு விலை உயர்வால் ஐரோப்பா பல பில்லியன் யூரோ இழப்பைச் சந்தித்துள்ளதாக ஃபிகோ வாதிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |