காசாவில் போர் கழிவுகளை அகற்ற இத்தனை ஆண்டுகள் ஆகலாம்! ஐ.நா வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்
காசாவில் போர் கழிவுகளை அகற்ற 21 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரியவந்துள்ளது.
போர் கழிவுகள்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான 15 மாத காலப் போர், காசாவை முற்றிலும் சீரழித்துள்ளது.
போரின் விளைவுகள் மிகவும் பேரழிவுகரமாக இருப்பதாக ஐ நா தெரிவித்துள்ள நிலையில் காசாவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர 21 ஆண்டுகள் வரை ஆகலாம் என்கிற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
காசாவின் சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் புதைந்துள்ளன.
நேற்று மட்டும் ராஃபாவில் 97 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரையிலான போரில் 47,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 11,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், 10,000க்கும் அதிகமான உடல்கள் இடிபாடுகளில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அத்துடன் வெடி குண்டுகளின் தாக்கத்தால் 2840 பேரின் உடல்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக காசாவின் சிவில் அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.
போரால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய போது, எதுவும் மீட்கக் கிடைக்கவில்லை என்றும், தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேர்த்த செல்வங்கள் எல்லாம் ஒரு கணத்தில் அழிந்து போனதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
69 ஆண்டுகள் பின்னுக்கு போன காசா
இந்தப் போர், காசாவை 69 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளதாக ஐநாவின் வளர்ச்சித் திட்டம் தெரிவித்துள்ளது.
காசாவை மீண்டும் கட்டியெழுப்ப 21 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும், குறைந்தபட்சம் 2040ஆம் ஆண்டுக்குள் தான் காசா முழுமையாக மீளுருவாக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தப் போர் நடவடிக்கை தீவிரமாக தொடங்கியது.
இஸ்ரேல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் இந்தப் போர் நீண்ட காலமாக நீடித்தது.
ரஷ்யா மற்றும் சீனா போரை நிறுத்த ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தாலும், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தடுத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |