காஸா போரில் கொல்லப்பட்டவர்கள் 200,000: உண்மையை உடைத்த இஸ்ரேலிய இராணுவத் தளபதி
காஸா போரில் இதுவரை 200,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்பதை முன்னாள் இஸ்ரேலிய இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி உறுதிப்படுத்தியுள்ளார்.
10 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள்
காஸாவில் ஒரு முறை கூட சட்டத்திற்கு உட்பட்டு இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் முன்னெடுக்கவில்லை என்றும் ஹலேவி தெரிவித்துள்ளார். காஸா மீதான போரை முதல் 17 மாதங்கள் முன்னெடுத்த ஹலேவி, கடந்த மார்ச் மாதம் பொறுப்பில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலில் ஒரு சமூக கூடுகையில் உரையாற்றிய அவர், காஸாவின் மொத்தமுள்ள 2.2 மில்லியன் மக்கள்தொகையில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயங்களுடன் தாப்பியுள்ளனர் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அதாவது 200,000 மக்களுக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவின் சுகாதார அமைச்சகம் வழங்கிய தற்போதைய புள்ளிவிவரங்களுக்கு அருகில் இந்த எண்ணிக்கையும் இருப்பதால் அந்த மதிப்பீடு உண்மையாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
ஆனால் காஸா சுகாதாரத்துறை வெளியிடும் இறப்பு எண்ணிக்கையை இஸ்ரேல் அதிகாரிகள் தொடர்ந்து புறந்தள்ளி வந்துள்ளனர். கடந்த 2023 அக்டோபர் 7ம் திகதி முதல் இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 64,718 என்றே காஸா சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது.
80 சதவீதம் பொதுமக்கள்
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 163,859 என குறிப்பிட்டுள்ளது. ஆனால் பல ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்திருக்கலாம் என்றே பொதுவாக அஞ்சப்படுகிறது. இதையே, தளபதி ஹலேவி தற்போது உறுதி செய்துள்ளார்.
காஸா அமைச்சகம் வெளியிடும் தரவுகளில், கொல்லப்பட்டவர்களில் பொதுமக்கள் யார் ஹமாஸ் வீரர்கள் யார் என்ற எண்ணிக்கை வெளியிடப்படுவதில்லை. ஆனால் கசிந்த இஸ்ரேல் இராணுவத் தரவுகளில், இந்த ஆண்டு மே மாதம் வரையில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் 80 சதவீதம் பொதுமக்கள் என்றே தெரிய வருகிறது.
தொடக்கத்தில் இருந்தே, காஸா மக்கள் மீது கடுமையானத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடும் ஹலேவி, உக்கிரமாக செயல்பட வேண்டும் என்பதே நெதன்யாகு நிர்வாகத்தின் முடிவாகவும் இருந்தது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |