காஸா நகரில் பஞ்சம்... வெளியாகவிருக்கும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு
காஸா நகரில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக உலகப் பசியைக் கண்காணிக்கும் பொறுப்புள்ள சர்வதேச அமைப்பு ஒன்று முதல் முறையாக இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தியோகப்பூர்வமாக
கடந்த 2004ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, இதுவரை நான்கு முறை மட்டுமே பஞ்சம் தொடர்பில் அறிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டின் தீவிரம் உள்ளிட்ட காரணிகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னர், கடந்த ஆண்டு சூடானில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
காஸாவின் சில பகுதிகளில் வரவிருக்கும் பஞ்சம் குறித்து இந்த அமைப்பு முன்னர் எச்சரித்திருந்தது, ஆனால் அதை முறையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், சுமார் 500,000 மக்கள் வசிக்கும் காஸா நகரில் உத்தியோகப்பூர்வமாக வெள்ளிக்கிழமை பகல் பஞ்சம் தொடர்பில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
காஸா பிராந்தியத்தில் உணவு தட்டுப்பாடு இருப்பதை தொடர்ந்து மறுத்துவரும் இஸ்ரேல், தற்போது காஸா சிட்டி மீது மூழு வீச்சுடன் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஒரு பகுதியில் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுவதற்கு, மூன்று கடுமையான அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்:
குறைந்தது 20 சதவீத குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டும்,
குறைந்தது 30 சதவீத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்,
ஒவ்வொரு நாளும் 10,000 பேருக்கு இரண்டு பேர் 'முழுமையான பட்டினியால் இறப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பின்மை
இந்த நிலையில், தற்போது காஸா நகரம், சுற்றியுள்ள மூன்று நகரங்கள் மற்றும் பல அகதிகள் முகாம்களை உள்ளடக்கிய 'காஸா கவர்னரேட்டில்' பஞ்சம் நிலவுவதாக ஐ.நா ஆதரவு அமைப்பு வெள்ளிக்கிழமை அறிவிக்கும்.
மட்டுமின்றி, செப்டம்பர் மாத இறுதிக்குள் டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் பகுதிகளிலும் பஞ்சம் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 1.07 மில்லியன் மக்கள், அதாவது காஸாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அவசரகால அளவிலான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் என்றும் அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
காஸா நிர்வாகம் இதுவரை வெளியிட்டுள்ள தகவலில், 112 சிறார்கள் உட்பட 271 பேர்கள் இதுவரை கடும் பட்டினியால் மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜூலை மாதத்தில் 5 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட 12,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக ஐ.நா. கூறுகிறது. இதில் 2,500 க்கும் மேற்பட்டோர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், இது மிகவும் ஆபத்தான நிலை என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இது அனைத்தும் வெறும் கட்டுக்கதை என்றும், காஸாவில் பட்டினியால் வாடும் நிலையில் யாரும் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இதே கருத்தையே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் தெரிவித்துள்ளார், வெளிவரும் புகைப்படங்களில் எவரும் பட்டினியால் வாடுவது போல் தெரியவில்லை என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |